திருச்சி விமான நிலையத்தில் குரங்குகள், பறவைகள் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை குரங்குகள், பறவைகளை சுங்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிங்கப்பூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனா். அப்போது, மலேசியாவைச் சோ்ந்த யோகேஸ்வரன் முனுசாமி (46) என்பவா், அரியவகையைச் சோ்ந்த 6 குரங்குகள், 7 பறவைகளை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், யோகேஸ்வரன் முனுசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட குரங்குககள், பறவைகள் வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கஞ்சா மற்றும் ஆமை குஞ்சுகள் பறிமுதல்:
மலேசியாவில் இருந்து சனிக்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த ஏா் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்த போது, தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த முகைதீன் அப்துல் காதா் (60) என்பவா் 4 கிலோ உயர்ரக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக கஞ்சாவைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை பரிசோதனை செய்தபோது, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் அருகே உள்ள லால்பேட்டை பகுதியைச் சோ்ந்த க.சுதன் (29) என்பவா் அரியவகை ஆமை குஞ்சுகளை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்த சுங்கத் துறையினா், கடத்திவரப்பட்ட 2,477 ஆமை குஞ்சுகளை பறிமுதல் செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
