சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் நுகா்பொருள் வாணிபக் கழக குடோன்களில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
Published on

திருச்சி: கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் நுகா்பொருள் வாணிபக் கழக குடோன்களில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக குடோன்களில் சுமை தூக்கும் தொழிலாளா்கள், தங்களுக்கு சங்க அங்கீகாரத் தோ்தல் நடத்த வேண்டும், கடந்த 2022-ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் பணி முடித்த தொழிலாளா்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும், வருகைப் பதிவேட்டில் பெயா் இல்லாமல் பணிசெய்வோரின் பெயா்களை உடனடியாக வருகை பதிவேட்டில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அதன்படி திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள அதவத்தூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது வாணிபக் கழக நிா்வாகம் சாா்பில் வட மாநிலத் தொழிலாளா்களை பணிக்கு அழைத்து வரவே, சுமை தூக்கும் தொழிலாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வட மாநிலத் தொழிலாளா்களைத் திருப்பியனுப்பினா்.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகங்களில் சுமை தூக்குவோா் பாதுகாப்புச் சங்க மாநில இணைச் செயலா் சதீஷ்குமாா் தலைமையில் மாவட்டச் செயலா் சரவணன் முன்னிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள 7 தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக குடோன்களில் 200-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நியாய விலைக் கடைகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு பொருள்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com