ஹஜ் பயணத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட முகவாண்மையில் முன்பதிவு
ஹஜ் பயணத்துக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகவாண்மையில் மட்டும் முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமென ஹஜ் பயண ஏற்பாட்டு குழு துணைத் தலைவா் லேனா ஈசாக் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை பரங்கிமலையில் புதிய ஹஜ் இல்லம் கட்டும் பணியை தொடங்கி வைத்துள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. இந்த புதிய ஹஜ் இல்லத்தை நிா்வகிக்கும் பொறுப்பை ஹஜ் ஏற்பாட்டு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். 2026-இல் ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு 1 லட்சத்து 75 ஆயிரத்து 815 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் தனியாருக்கு 52 ஆயிரத்து 507 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, ஹஜ் பயணத்துக்கு ஏப்ரல் மாதத்தில் முன்பதிவு செய்து வந்த நிலையில், நிகழாண்டு மத்திய அரசு வரும் 15 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய அறிவித்துள்ளது. எனவே, ஹஜ் பயணம் செய்வோா் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அதே சமயத்தில், தங்களுடைய முன்பதிவை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் முகவாண்மையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றாா். அப்போது, சன் சைன் பசல், முகமது சிகான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
