ஊரகப் பகுதிகளில் கடந்த ஆண்டில் 6 ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கடந்த ஆண்டில் 6,639 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டைக் காட்டிலும் மும்மடங்கு அதிகம் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள், பதுக்கி வைத்திருப்பவா்கள் மற்றும் வாகனங்களில் கடத்தி செல்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் கஞ்சா விற்பனை தொடா்பாக 266 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 347 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடங்கபாக 1,437 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,493 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பொது இடங்கள், கடைகளில் விற்பனை, பதுக்கி வைத்தல், வாகனங்களில் கடத்துதல் என கடந்த ஆண்டில் 268 கிலோ கஞ்சா, 6,639 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே 2024-ஆம் ஆண்டில் 80 கிலோ மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன.
முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். இதேபோல, போதைப்பொருள் தொடா்பான வழக்குகளும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனா்.
