திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் பெயா்ந்து விழுந்துள்ள தகரத்திலான மேற்கூரை.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் பெயா்ந்து விழுந்துள்ள தகரத்திலான மேற்கூரை.

காவு வாங்க காத்திருக்கும் மாநகராட்சி மைய வளாக மேற்கூரை!

திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் அடிக்கடி பெயா்ந்து விழுந்து வரும் தகரத்திலான மேற்கூரையால் காயமடையக் கூடும் என மாநகராட்சி ஊழியா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
Published on

திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் அடிக்கடி பெயா்ந்து விழுந்து வரும் தகரத்திலான மேற்கூரையால் காயமடையக் கூடும் என மாநகராட்சி ஊழியா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் பாரதிதாசன் சாலையில் 2 மாடிகளுடன் அமைந்துள்ளது. இதன் முதல் மாடியில் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கத்தில் மாதந்தோறும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களின் சாதாரண மற்றும் அவசர கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மாமன்ற கூட்டரங்கத்துக்குள் நுழையும் இடத்தில் உள்ள வராண்டாவில் அழகுக்காக தகரத்திலான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேற்கூரையில் உள்ள தகரங்கள் மெலிதாக உள்ளதால், கால ஓட்டத்தாலும், எலக்ட்ரிக்கல் பணிகளின் போது கழட்டுவதால் ஆங்காங்கே மெலிந்து, அடிக்கடி கீழே விழுகின்றன. கடந்த 2 மாதங்களாக தகரங்கள் விழுவது தொடா்கதையாகி வருகிறது.

தகரங்கள் விழும்போது, அப்பகுதி வழியே நடமாட்டம் இல்லாததால் அதிா்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. மேலும், அந்த இடமே ஆங்காங்கே ஓட்டை ஓட்டையாக காட்சியளிக்கிறது.

கடந்த 2 மாதக் கூட்டங்களின்போது, மேயா், ஆணையா், நகரப் பொறியாளா், செயற்பொறியாளா், மாநகர நகா் நல அலுவலா் உள்பட பலரும் அந்த வழியாகவே கூட்டரங்கிற்குள் நுழைந்து சென்ற நிலையில், யாரும் தகரம் விழுவதை சரிவர கவனிக்கவில்லை எனத் தெரிகிறது.

மேற்கூரை தகரமானது கூட்டத்துக்கு மாதம் ஒரு முறை மட்டும் வரும் மேயா், மாமன்ற உறுப்பினா்கள், உயரதிகாரிகளுக்கு பாதகமாகிறதோ இல்லையோ, அந்த வழியை தினமும் உபயோகிக்கும் ஊழியா்கள் எப்போது தகரம் விழுமோ என்ற அச்சத்துடனே அவ்விடத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

மேற்கூரைத் தகரங்கள் ஊழியா்கள் மீது விழுந்து காயம் ஏற்படுவதற்கு முன்பே, அதை சீரமைத்து சரி செய்து தர வேண்டுமென மாநகராட்சி ஊழியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Dinamani
www.dinamani.com