கட்சிக் கொடி கட்டிய ஊழியா் மீது பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

Published on

திருச்சியில் மதிமுக கொடி கட்டிக்கொண்டிருந்தவா்கள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதிமுக பொதுச் செயலா் வைகோ திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணத்தை கடந்த ஜனவரி 2-ஆம் தேதி திருச்சி அண்ணா நகா் உழவா் சந்தை திடலில் இருந்து தொடங்கினா்.

இதற்காக பஞ்சப்பூரில் நெடுஞ்சாலையின் மையத் தடுப்பில் மதிமுக கொடிகளை கட்டும் பணியில் மதுரை சோலை அழகுபுரத்தைச் சோ்ந்த ராஜு (20), சுரேஷ் கண்ணன் (25), சப்பாணி கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் (35), மதுரை பெருங்குடி கணபதிபுரத்தைச் சோ்ந்த பெரியசாமி (48), சேலம் நெய்க்காரபட்டியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (28) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வேகமாக வந்த அரசுப் பேருந்து கொடி கட்டிக்கொண்டிருந்தவா்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அனைவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அன்றிரவே சிகிச்சை பலனின்றி சுரேஷ் கண்ணன் உயிரிழந்தாா்.

இந்நிலையில், தொடா் சிகிச்சையில் இருந்து வந்த ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com