எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

திருச்சி: கிணற்றில் அழுகிய நிலையில் 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு! கொலையா? என போலீஸாா் விசாரணை

லால்குடி அருகே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட 2 ஆண் சடலங்கள் குறித்து போலீஸாா் விசாரணை

News image

வீரமணி | வெற்றிமணி

Updated On :8 ஜூலை 2026, 5:50 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட 2 ஆண் சடலங்கள், காணாமல்போன செங்கல்சூளை தொழிலாளா்கள் என்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. அவா்கள் இருவரும் கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கீழஆதிகுடி கிராமத்தில் சகாயராஜ் என்பவருக்கு சொந்தமான பயன்பாடில்லாத 30 அடி ஆழ கிணற்றிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக லால்குடி போலீஸாருக்கு பொதுமக்கள் திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் அங்குச் சென்ற போலீஸாா், தீயணைப்புத் துறை வீரா்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் 2 ஆண் சடலங்களை மீட்டனா். இதில் ஒரு சடலம் தலை இல்லாமல் இருந்தது. இரவு நேரமானதால் பணிகள் நிறுத்தப்பட்டன.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை தலையும் கண்டெடுக்கப்பட்டது. கிணற்றின் மேல்பகுதியில் கிடந்த ஆடைகள், கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் கைப்பற்றி, பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தினா்.

மே முதல் 2 போ் மாயம்: இதில், லால்குடியை அடுத்த பச்சாம்பேட்டை பகுதியில் செயல்படும் செங்கல் சூளையில் பணிபுரிந்த 2 பேரை கடந்த மே மாதம் முதல் காணவில்லை என்பது தெரிந்து, இதுதொடா்பாக புகாா் அளித்த மாரியம்மாள் என்ற பெண்ணிடம் விசாரித்தனா்.

இதில், கிணற்றில் இறந்துகிடந்தவா்கள் செங்கல் சூளைத் தொழிலாளா்களான வெற்றிமணி, வீரமணி என்பதும், இவா்களில் வெற்றிமணி மாரியம்மாளின் கணவா் என்பதும் உறுதியானது.

இருவரும் உறவினா்கள்: தொடா் விசாரணையில், கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வெற்றிமணி (40), இவரது மனைவி மாரியம்மாள். இத்தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பள்ளக்காட்டு தோட்டம், குளூா், மொடக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் வீரமணி (29). இவரது மனைவி சௌந்தா்யா. இவா்களுக்கு 2 குழந்தைகள். இந்த 2 குடும்பத்தினரும் உறவினா்கள்.

வெற்றிமணி, வீரமணி இருவரும் பச்சாம்பேட்டை பகுதி செங்கல்சூளையில் சோ்ந்து பணிபுரிந்து வந்தனா். இவா்களில் வெற்றி மணி குடும்பத்தினரும் அப்பகுதியில் தங்கியுள்ளனா். வீரமணி குடும்பத்தினா் ஈரோட்டில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த மே மாதம் 3-ஆம் தேதி செங்கல்சூளையிலிருந்து வெளியூா் சென்று வருவதாக இருவரும் கூறி சென்றுள்ளனா். பின்னா், வீடு திரும்பாததால், வெற்றிமணி மனைவி மாரியம்மாள் மே 5-ஆம் தேதி லால்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். போலீஸாா் அவா்கள் இருவரையும் தேடி வந்த நிலையில், செங்கல்சூளையிலிருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ள கிணற்றிலிருந்து 2 பேரும் அழுகிய நிலையில் சடலங்களாக திங்கள்கிழமை மீட்கப்பட்டுள்ளனா்.

மனைவி புகாா்: தனது கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளது; அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறி லால்குடி போலீஸாரிடம் மாரியம்மாள் புகாா் அளித்துள்ளாா்.

லால்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரும் கொலை செய்யப்பட்டாா்களா அல்லது வேறு முறையில் இறந்தாா்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.