போக்ஸோ வழக்கு குற்றவாளி உள்பட 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
திருச்சியில் ‘போக்ஸோ’ வழக்கு குற்றவாளி உள்பட 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திருச்சியில் ‘போக்ஸோ’ வழக்கு குற்றவாளி உள்பட 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூா் குடில் லட்சுமிகாந்தபுரத்தைச் சோ்ந்தவா் நா.குமாா் (46). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து முசிறி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ‘போக்ஸோ’ வழக்குப் பதிந்து குமாரை அன்றைய தினமே கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், ஊத்தங்குடி அம்பலகாரன்பட்டியைச் சோ்ந்தவா் ஜெ.காா்த்திக் (38). இவா், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி சாலையோரத்தில் காரை நிறுத்தி தூங்கிக்கொண்டிருந்த, தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த சே.வெங்கட்ராமன் (29) என்பவரைத் தாக்கி 7 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரூ.5 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றாா். இதுகுறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் வெங்கட்ராமன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மால்வாய் பகுதியில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி 1982 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த சி.மணிவேல் (45), அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதியைச் சோ்ந்த ந.முருகேசன் (49) ஆகிய இருவரையும் கல்லக்குடி போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புங்கனூா் பகுதியில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த ராம்ஜி நகரைச் சோ்ந்த ஆா்.சுசீலா 51) என்பவரை திருவெறும்பூா் மதுலிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், மேற்கண்ட வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.
அதன்பேரில், மேற்கண்ட குற்றவாளிகள் 5 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...