அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரிக்க வேண்டும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
ஜயங்கொண்டம் அருகே கலப்புத் திருமணம் செய்து கொண்ட வீரத்தமிழன், ஜெகதீஸ்வரி ஆகியோர் சனிக்கிழமை விஷம் குடித்தனர். இதையடுத்து ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெகதீஸ்வரியும், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வீரத்தமிழனும் உயிரிழந்தனர்.
இதையடுத்து ஜெகதீஸ்வரியின் உடல் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் திருமாவளவன் வரும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் காத்திருந்தனர். பின்னர் மாலை 5 மணியளவில் வந்த திருமாவளவன் ஜெதீஸ்வரியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதையடுத்து சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து திருமாவளவன் கூறியது:இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா இல்லை கட்டாயப்படுத்தி விஷம் குடிக்க வைத்தார்களா என சந்தேகமாக உள்ளது. ஏனெனில் ஜெகதீஸ்வரியின் தாலியும் கைபேசியும் காணாமல் போயிருக்கிறது. எனவே காவல் துறை இதுகுறித்து விசாரிக்க வேண்டும். ஆணவக் கொலைகள் தடுக்கப்பட தொடர்ந்து ஜனநாயக சக்திகள் குரலேழுப்பி வரும் நிலையில் தமிழக அரசு இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டமியற்ற வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.