அனைத்து வசதிகளுடன் அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமையுமா?

அரியலூரில் அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கையாகி இருக்கிறது.
Updated on
2 min read

அரியலூரில் அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கையாகி இருக்கிறது.
கடந்த 2007இல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட அரியலூரில் சுமார் 11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். 2 மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 18 காவல் நிலையங்கள் உள்ளன.
குற்றங்கள் நிறைந்த மாவட்டம் என்ற நிலை மாறி, தற்போது தொழில் வளர்ச்சி பெறும் மாவட்டமாக உருவெடுத்து வருகிறது. அரியலூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 100 ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒன்றரை ஏக்கரில் முன்சீப் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இந்த நீதிமன்றத்தில் தான் ஆஜர்படுத்தப்பட்டார்.
மாவட்டத்தில் பெருகி வந்த குற்றங்களையடுத்து, முன்சீப் நீதிமன்றமாக செயல்பட்டு வந்த நீதிமன்ற வளாகத்தில், மற்ற நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. மாவட்டம் பிரிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் மாவட்ட நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வழக்குரைஞர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களின் பயனாக 2011-இல் முன்சீப் நீதிமன்றம் செயல்பட்ட அதே வளாகத்தில் மாவட்ட நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
இங்கு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட அமர்வு விரைவு நீதிமன்றம், உதவி அமர்வு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என 6 நீதிமன்றங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
ஆபத்தான நிலையில் நீதிமன்ற வளாகம்: ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருக்க வேண்டிய எந்த வசதியும் தற்போதுள்ள அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இல்லை. குறிப்பாக, வழக்காடிகள், பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இடவசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
அதோடு, 100 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் என்பதால் மழைநீர் கட்டடத்துக்குள் கசிவதால் வழக்கு தொடர்பான ஆவணங்கள் நனைத்து விடுகிறது. மேலும், எலித்தொல்லையும் இருப்பதால் ஆவணங்கள் சேதமாகின்றன. தற்போது கட்டடத்தின் மேலே மரங்கள் முளைத்துள்ளதால், கட்டடம் இடியும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கான இடம் தேர்வு செய்ய மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன்பேரில், அரியலூர் புறவழிச்சாலை அருகே அம்மாகுளத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்து, பரிந்துரைக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பைவிட இடத்துக்கு கூடுதலாக இந்து சமய அறநிலையத் துறை கேட்பதால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தமிழக அரசு இது குறித்து ஆய்வு செய்து அம்மாகுளத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இதுகுறித்து அரியலூர் வழக்குரைஞர்கள் சங்கச் செயலாளர் பழனிசாமி கூறுகையில், அரியலூரில் தற்போது இயங்கி வரும் நீதிமன்றத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
பழைய கட்டடம் என்பதால் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
திடீரென்று ஓடுகள் உடைந்து விழுவதால் நீதிமன்றத்தின் உள்ளே அமர்ந்து பணிபுரிய அச்சமாக இருக்கிறது. தமிழக அரசு இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றார்.
தனியார் கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றங்கள்

மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம், குடும்ப நல நீதிமன்றம், மகளிர் நீதிமன்றங்களுக்கு, நீதிமன்ற வளாகத்தில் இடம் இல்லாததால், அரியலூரில் பல்வேறு இடங்களில் தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com