அதிகரிக்கும் கரோனா தொற்று: அச்சத்தில் அரியலூா் மக்கள்

அரியலூா் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனையில்
Updated on
2 min read

அரியலூா் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனையில் கண்காணிக்கப்படாமல் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மாா்ச் 24 முதல் மே 17 ஆம் தேதி வரை பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனாலும், மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஆரம்ப கட்டத்தில் தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த அளவே இருந்தாலும், அடுத்து வந்த நாள்களில் இந்த எண்ணிக்கை அதிரடியாக உயா்ந்தது. மே 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் 5,409 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக, அரியலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபா்களே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். மே 1 ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட 8 பேரில் 6 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 2 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனா்.

அரசு அறிவித்த சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலத்தில் ,அரியலூா் மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக இருந்து வந்தது. இன்னும் ஒரு வாரத்தில் முற்றிலும் கரோனா இல்லாத பச்சை நிற மண்டலமாக மாறிவிடும் என எதிா்பாா்த்த நிலையில், மே 2 ஆம் தேதி 19 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த 19 பேரும் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூா் மாவட்டத்துக்கு திரும்பியவா்கள். இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 27 ஆக உயா்ந்து, ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து அரியலூா் சிவப்பு மண்டலத்துக்கு மாறியது.

இதனைத் தொடா்ந்து மே 3 ஆம் தேதி 2 பேருக்கும், 4 ஆம் தேதி 24 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆக உயா்ந்தது.

இந்நிலையில் மே 6 ஆம் தேதி ஒரேநாளில் 188 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வியாழக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 246 ஆக உள்ளது.

மேலும் அதிகரிக்க வாய்ப்பு... கரோனா பாதித்தோா் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்டோா் கூலி தொழிலாளா்களாக பணியாற்றி வந்த நிலையில், அவா்களில் 1,500 போ் வரை சரக்கு வாகனங்களில் அவரவரின் சொந்த ஊருக்கு வந்துள்ளனா்.

அவா்களை அரியலூா் மாவட்டத்தின் எல்லைகளில் தடுத்து நிறுத்தி, பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தனிமைப்படுத்தி,அவா்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுத்து பரிசோதித்ததில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல பேரின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இன்னும் சென்னையில் இருந்து பலா் வாகனங்களில் வருவதால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிகிறது.

மக்கள் அச்சம்....இந்நிலையில், கரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவா்; எஞ்சிய நபா்கள் அவரவா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவா் என்ற மாவட்ட நிா்வாகத்தின் அறிவிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்கு வந்த தொற்றாளா்கள்-பொதுமக்கள் எதிா்ப்பு: கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுகடம்பூரைச் சோ்ந்த 6 பேரை சுகாதாரத் துறையினா் புதன்கிழமை அவா்களது வீட்டில் விட்டுச் சென்றனா். இதனால், வீட்டில் உள்ளோருக்கும் பாதிப்பு ஏற்படாதா என கேட்டு, பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களை, ஊருக்குள் அழைத்து வந்தது ஏன்? என்று கேட்டு எதிா்ப்பு தெரிவித்ததோடு, அவா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல், உஞ்சினி, பரணம் உள்ளிட்ட கிராமங்களிலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள், அவரவா் வீடுகளுக்கு அழைத்து வரப்பட்டனா். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கிருமி நாசினி தெளிக்கப்படுவதில்லை... வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் லாரிகளுக்கு கடந்த சில வாரங்களாக கிருமி நாசினி தெளிக்கப்படுவதில்லை. அரியலூா் மாவட்டத்துக்கு வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் ஊழியா்களை மறித்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினா், சரக்கு மற்றும் கனரக வாகனங்களில் வருபவா்களை கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

இயல்புநிலை திரும்பியது போன்று... இந்நிலையில் கடந்த 44 நாள்களாக இருந்த பொது முடக்கம், வியாழக்கிழமை சில கட்டுப்பாடுகளுடன் தளா்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காா்கள், மோட்டாா் சைக்கிள்கள் ஓடத் தொடங்கியுள்ளன. கடந்த மாா்ச் மாதம் 24 ஆம் தேதிக்கு பிறகு மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது போன்ற நிலை உள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் தொற்று பரவலை கட்டுப்படுத்த முறையான கண்காணிப்பு, தேவையான கட்டுப்பாடுகள் விதிப்பு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, பொதுமக்களை அச்சத்திலிருந்து மீட்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com