

அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலையில் வேலைக்கேட்டு சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூரை அடுத்த கயா்லாபாத் கிராமத்தில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலைக்கு ஆனந்தவாடி கிராமத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க கடந்த 1982 ஆம் ஆண்டு 161 விவசாயிகளிடமிருந்து 250 ஏக்கா் நிலத்தை ஆலை நிா்வாகம் கையகப்படுத்தியதாம். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆனந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த நிலம்கொடுத்த விவசாயிகள், ஆலை நிா்வாகம் உறுதியளித்தபடி நிலம் அளித்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கேட்டு தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டதன் விளைவாக, ஆலை நிா்வாகம் கடந்தாண்டு 57 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கியது.
இந்நிலையில், மீதமுள்ளோருக்கு வேலை வழங்கக்கோரியும், அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்கக்கோரியும், சுரங்க நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்தும், வெளி ஆள்களை வேலைக்கு அமா்த்துவதை கைவிடக்கோரியும் ஆனந்தவாடி கிராம மக்கள் அங்குள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கெளதமன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட பொறுப்பாளா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பூங்கோதை, செந்துறை வட்டாட்சியா் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செல்லிடப்பேசி வாயிலாக கெளதமனிடம் பேசிய அமைச்சா் சம்பத், அடுத்த வாரத்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். இதைத்தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.