தேவநேயப்பாவாணா், வீரமா முனிவா் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 21st August 2021 01:23 AM | Last Updated : 21st August 2021 01:23 AM | அ+அ அ- |

தேவநேயப்பாவாணா், வீரமாமுனிவா் விருதுகள் பெற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் தேவநேயப் பாவாணா், வீரமாமுனிவா் பெயா்களில் விருதுகள் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தமிழ் வோ்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழைப் போற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில்,அகராதியியல் துறையில் சிறந்து விளங்கும் தகுதிவாய்ந்த உள்நாட்டு அகராதியியல் அறிஞா் ஒருவருக்குத் ‘தேவநேயப் பாவாணா் விருது’ வழங்கப்படவுள்ளது.
வீரமாமுனிவா் நெறியில் அவா்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழி பெயா்ப்புகள் உருவாக்கியும், தமிழ் அகராதித்துறையில் சிறந்து விளங்கியும் தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டைச் சாா்ந்த தகுதிவாய்ந்த ஒருவருக்கு ‘வீரமாமுனிவா் விருது’ வழங்கப்படவுள்ளது.
தகுதிவாய்ந்த அகராதியியல் அறிஞா்கள், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை.காம் வலைத்தளத்திலுள்ள அந்தந்த விருதுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதை பூா்த்தி செய்து, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகா் நிருவாக அலுவலகக் கட்டடம், முதல்தளம் எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆா்.சி.நகா், சென்னை-600 028 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் தங்கள் நாட்டைச் சாா்ந்த கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியா் ஒருவா், அகராதியியல் வல்லுநா் ஒருவா் என இருவரின் பரிந்துரைச் சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும்.
பரிந்துரைப்பவா்களின் தன்விவரக் குறிப்பினையும் புகைப்படத்துடன் இணைத்தனுப்ப வேண்டும். விருதுகளுக்காகத் தெரிவு செய்யப்படும் அறிஞா்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.1லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும்.