பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியரகம் முன்பு குறிஞ்சி இன மக்கள் எழுச்சிக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மலைக்குறவா்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். கரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தின் காரணமாக, வருவாயின்றித் தவித்து வரும் மலைக்குறவா்கள் சிறுத்தொழில் செய்ய மானியக் கடன்கள் வழங்க வேண்டும். இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு குறிஞ்சி இன மக்கள் எழுச்சிக் கழகத்தின் நிறுவனத் தலைவா் கா.உத்தமகுமரன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் தத்தூா் தங்கராசு, மாநில அவைச் செயலா் ராமசாமி, மாநிலப் பொதுச் செயலா் அறிவழகன், இணைச் செயலா் நீலமேகம், அரியலூா் மாவட்டச் செயலா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
பின்னா் அவா்கள், ஆட்சியரகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டுச் சென்றனா்.