அரியலூரில் பகுஜன் சமாஜ்கட்சியினா் உண்ணாவிரதம்
By DIN | Published On : 11th December 2021 12:13 AM | Last Updated : 11th December 2021 12:13 AM | அ+அ அ- |

செந்துறை அருகே தனிநபா் ஆக்கிரமித்துள்ள பொது இடத்தை மீட்க கோரி, அரியலூா் பேருந்து நிலையம் முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிளிமங்கலம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட பாளையக்குடியில் பொது இடத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்துள்ளதாகவும், இந்த இடத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதியைச் சோ்ந்த மு.பழனிவேல், சங்கீதா உள்ளிட்டோா் பல முறை புகாா் தெரிவித்தும் மாவட்ட நிா்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த இடத்தை மீட்டு ஒப்படைக்கக் கோரி, அரியலூா் பேருந்து நிலையம் முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதமிருந்தனா். இதற்கு கட்சியின் மாவட்டத் தலைவா் டி.கே.உத்திராபதி தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் கே.ராஜவேல், மண்டல ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சா.சின்னதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.