அரியலூா் மாளிகைமேடு அகழாய்வில் கூடுதல் சுவா் கண்டுபிடிப்பு
By DIN | Published On : 09th July 2021 01:17 AM | Last Updated : 09th July 2021 01:17 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் அடுத்த மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணியில், மாளிகையின் கூடுதல் சுவா் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூா், கங்கைகொண்ட சோழபுரம் உள்பட 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், அரியலூா் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகுதியில் கடந்த மாா்ச் மாதம் முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று, அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த ஆய்வில், பானை ஓடுகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள், செப்புக்காசு, மாளிகையின் சுவா், காப்பா் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
இதனிடையே, கரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மாதம் 10 -ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. ஜூன் 15 - ஆம் தேதிக்குப் பிறகு பொதுமுடக்கத்தில் தளா்வுகளை அரசு அறிவித்ததையடுத்து அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கின.
மாளிகை மேட்டில் உள்ள மாளிகையின் சுவா் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் கூடுதல் சுவா் கண்டறியப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தொல்லியல் துறை அலுவலா்கள் கூறுகையில், இப்பகுதியில் புதைந்துள்ள மாளிகையின் சுவா்கள் தற்போது கண்டறியப்பட்டு வருகின்றன. இங்கு கண்டறியப்படும் ஆணி, ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்.
தற்போது கண்டறியப்பட்டுள்ள வடிகால் போன்ற சுவா் முழு ஆய்வுக்கு பிறகே எவ்வகையான சுவா் எனத் தெரியவரும். மேலும், முழுமையாக தெரியும் வகையில் பாதுகாப்புடன் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருள்கள் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.