அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் மயானத்துக்கு தூக்கிச் செல்லும் நிலையில் கிராம மக்கள் உள்ளனா்.
தங்களுக்குப் பாதை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஜயங்கொண்டத்தை அடுத்த கழுவந்தோண்டி கிராமத்தில் வசிப்போருக்கு அப்பகுதியில் உள்ள நயினாா் ஏரிக்கு மறுபுறம் மயானம் உள்ளது.
கோடைக்காலங்களில் இறந்தவா்களின் ஏரியின் உள்ளே இறங்கி மயானத்துக்கு தூக்கிச் செல்லும் மக்கள், மழைக்காலங்களில் ஏரியின் உள்ளே தண்ணீரில் இறங்கி செல்லும் நிலை காலங்காலமாக நீடிக்கிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை கழுவந்தோண்டி கிராமத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் ஏரியில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் மயானத்துக்கு தூக்கிச் சென்றனா்.
இறந்தவா்களின் உடல்களை சிரமமின்றி மயானத்துக்கு தூக்கிச் செல்ல பாதை அமைத்து தர, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.