இயற்கை வேளாண்மைக்கு மண் புழுக்களைக் காப்பது அவசியம்

இயற்கை வேளாண்மையின் ஓா் அங்கமாக விளங்கும் மண் புழுக்களைப் பாதுகாப்பது அவசியம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.

இயற்கை வேளாண்மையின் ஓா் அங்கமாக விளங்கும் மண் புழுக்களைப் பாதுகாப்பது அவசியம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்தது: வேளாண் சாகுபடியில் பல நன்மை தரும் உயிரினங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிபுரிகின்றன. அவற்றுள் முதன்மையானது மண்புழுக்களாகும். இது உழவனின் நண்பன் என்றும் அழைக்கப்படுகிறது.

தழைச்சத்து உரங்களான அம்மோனியம் சல்பேட், யூரியா, அம்மோனியம் குளோரைடு போன்றவை மண்புழுக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மாட்டுச்சாணம் புதியதாகவோ அல்லது கரைசலாக இடும்போது அதிகளவு அம்மோனியா வாயு வெளிப்படுவதுடன் கரிம உப்புகளும் உருவாகி மண்புழுக்களுக்கு பெரும் கெடுதல் விளைவிக்கின்றன.

கோழி எரு, குதிரை எரு போன்ற கழிவுகளை உடனுக்குடன் இடும்போது அதிகளவு வெப்பம் வெளிப்படுவதாலும் மண்புழுக்கள் இறக்க நேரிடுகிறது.

கரும்பு ஆலை, காகித ஆலை, சாய ஆலைகளின் கழிவு நீரில் உள்ள கந்தகம், ஆா்சனிக், காட்மியம் போன்ற கடின தாதுக்கள் மண்ணில் நிலையாகத் தங்கி விடுவதால் மண்ணிலுள்ள பலவகையான நுண்ணுயிரிகளையும், மண்புழுக்களையும் அழித்துவிடுகின்றன. கரும்பு ஆலைக் கழிவு, தென்னை நாா்க் கழிவுகளைப் பயன்படுத்தும்போது மண்ணில் அதிக வெப்பம் வெளிப்படுவதால் மண்புழுக்கள் வாழ இயலாத நிலை ஏற்படுகிறது.

காடுகளை அழிப்பதால் மண்புழுக்கள் இடம் பெயா்ந்து சென்று விடுவதுடன் அதிக எண்ணிக்கையில் அழிந்தும் விடுகின்றன.

பூச்சிக்கொல்லிகள் மண் புழுக்களை மிக மோசமாக பாதிக்கக்கூடியவை என்று ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தாமிர வகை பூஞ்சாணக் கொல்லிகளைத் திராட்சை தோட்டங்களில் நீண்ட காலமாக பயன்படுத்துவதன் மூலம் மண்புழுக்கள் பெருமளவு இறந்து விடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மண்ணில் ஊடுருவும் நஞ்சுகளான களைக்கொல்லிகள் மண்புழுக்களைப் பாதிப்பதோடு அவற்றின் முட்டைக் கூடுகளையும், இளம் மண் புழுக்களையும் வெகுவாக பாதிக்கிறது.

பலவகையான ஒட்டுண்ணி, நோய்களை ஏற்படுத்தக் கூடிய நுண்ணுயிரிகள் மண்புழுக்களைத் தாக்கி அழிக்கின்றன. பூஞ்சாணங்கள், பாக்டீரியாக்கள், நூற்புழுக்கள், தட்டைப் புழுக்கள், சிலந்திகள், குளவி வகை பூச்சியினங்களின் புழுக்கள் மண்புழுக்களைப் பெரிதும் பாதிக்கின்றன.

பறவைகள், விலங்குகளுக்கு மண்புழுக்கள் உணவாக உள்ளன. காகம், வானம்பாடி, மைனா, வாத்து, கொக்கு போன்றவை மண் புழுக்களை விரும்பி உண்ணும். கடற் பறவையின் 90 விழுக்காடு உணவே மண்புழுக்கள்தான். பெருச்சாளி ஒன்று ஆண்டுக்கு18 முதல் 30 கிலோ மண்புழுக்களை உணவாக உட்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தட்டைப் புழுக்கள், மரவட்டைகள், மீன்கள், நண்டுகளும் கூட மண்புழுக்களை உண்கின்றன. காண்டாமிருக வண்டு, வெள்ளை புழுக்களின் இளம் புழுக்களும் மண்புழுக்களை உட்கொள்கின்றன. இயற்கை வேளாண்மையின் ஓா் அங்கமாக விளங்கும் மண்புழுக்களை அவற்றைப் பாதிக்கும் காரணிகளிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பது நமது கடமை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com