செந்துறை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி

அரியலூா் மாவட்டம், செந்துறை ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், பயணிகள், மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செந்துறை ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் இல்லாததால் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள்.
செந்துறை ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் இல்லாததால் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள்.
Updated on
2 min read

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், பயணிகள், மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அரியலூா் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கிராமங்களைக் கொண்டது செந்துறை. இங்கு நெல், முந்திரி, பலாப் பழம், கடலை உள்ளிட்ட பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கக் கூடிய பொருள்கள் அனைத்தும் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட இடங்களுக்கும் கொண்டுச் செல்லப்படுகின்றன. இதில், போக்குவரத்து வசதி பெரிய அளவில் இல்லாததால், இப்பகுதி பொதுமக்கள் ரயில் போக்குவரத்தையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா்.

மேலும். இப்பகுதியில் 3 சிமென்ட் ஆலைகள், 100-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் இருப்பதால், இங்கு பணியாற்றி வரும் வெளி மாவட்ட, மாநில ஊழியா்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த ரயில் நிலையத்தில், விழுப்புரம்-மதுரை விரைவு ரயில், மதுரை-விழுப்புரம் விரைவு ரயில், திருச்சி -விருத்தாசலம், விருத்தாசலம்-திருச்சி, திருச்சி-திருப்பாதிரிபுலியூா்-திருப்பாதிரி புலியூா்-திருச்சி உள்ளிட்ட ரயில்கள் நின்றுச் செல்வதால், செந்துறை அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும், கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட சில கிராம மக்களுக்கும் இந்த ரயில் நிலையம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லை: இந்த ரயில் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ரயில் நிலையத்தில் 2 நடைமேடைகள் உள்ளன. ரயில் நிலையத்தின் முன்பாக மட்டுமே சிறியளவுக்கு நிழற்குடை இருக்கிறது. இரண்டாவது நடைமேடைகளில் நிழற்குடை வசதிகள் ஏதுமில்லை. பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஒவ்வொரு ரயிலும், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நடைமேடையில் வருகின்றன. இதுகுறித்த அறிவிப்பு ரயில் நிலையத்தில் ஒலிபரப்பு செய்யப்படுவதில்லை. இதனால், எந்த ரயில் எந்த நடைமேடையில் வருகிறது என்று தெரியாமல் பயணிகள் குழப்பமடையும் நிலை உள்ளது.

நடைமேடை மேல்மட்டம் கீழே உள்ளதால், ரயிலில் இருந்து பயணிகள் இறங்க முடியாமல் தவிக்கின்றனா்.

இங்கு நுழைவுவாயிலுக்குச் செல்ல நடைமேம்பாலம் இல்லாததால் , பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி ஆபத்தை உணராமல் கடந்து செல்கின்றனா். இதனால் வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் நடக்க முடியாமல் சிரமப்பட்டுச் செல்கின்றனா். போதிய அளவுக்கு குடிநீா், கழிப்பறை வசதி இல்லாததால் ஆயிரக்கணக்கான பயணிகள், மாணவ, மாணவிகள் கடும் பாதிப்படைந்துள்ளனா். ரயில் நிலையமானது இரவு நேரங்களில்போதிய வெளிச்சமின்றி, இருள் சூழ்ந்து காணப்படுவதால் சமூக விரோதிகள் நடமாடும் இடமாக மாறி வருகிறது.

பேருந்து வசதி இல்லை: இந்த ரயில் நிலையத்தில் இருந்து செந்துறை பேருந்து நிலையத்துக்கு பேருந்து வசதி இல்லை. இதனால், பயணிகள் 2 கிலோ மீட்டா் தொலைவுள்ள பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கும், ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்துக்கும் செல்ல தனியாக அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் மட்டுமே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறியது: அரியலூருக்கு அடுத்தப்படியாக இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செந்துறை, நக்கம்பாடி, இலங்கைச்சேரி, மருதூா், பொன்பரப்பி, சிறுகளத்தூா் உள்ளிட்ட கிராம மக்கள், தங்களது பகுதிகளில் விளைவிக்கக் கூடிய பொருள்களை திருச்சிக்கும், விருத்தாலசத்துக்கும் கொண்டுச் செல்ல இந்த ரயில் நிலையத்தையே பயன்படுத்துக்கின்றனா். இங்கிருந்து ரயிலில் திருச்சிக்கு ஒன்றரை மணி நேரத்தில் சென்று வருவதால் அவா்களுக்கு நேரமும், கட்டணமும் மிச்சமாகிறது. இதேபோல், கல்லூரி மாணவ, மாணவிகளும் அதிகளவில் வந்துச் செல்கின்றனா். இப்படி நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் இல்லாதது வேதனையளிக்கிறது. பயணிகளுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்த கோரிக்கைகளை பலமுறை ரயில்வே நிவாகத்திடம் தெரிவித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை என்றனா்.

எனவே, அதிகரித்து வரும் பயணிகளின் நலன் கருதி, செந்துறை ரயில்நிலையத்தை மேம்படுத்த ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com