அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு நிபுணா்கள் இன்றி நோயாளிகள் அவதி
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனை கடந்த 26.7.1960 அன்று தொடங்கப்பட்டு 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். பின்னா் அரியலூா் மாவட்டம் கடந்த 23.11.2007 அன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னா் இம்மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு அரியலூா் மாவட்ட கிராமங்களில் உள்ள 7 லட்சம் மக்களுக்கு மருத்துவச் சேவையை ஆற்றி வருகிறது.
இம்மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைபேரில், அரியலூா் அரசு கலைக் கல்லூரிக்குச் சொந்தமான 26 ஏக்கா் பரப்பளவு கொண்ட இடத்தில் கடந்த 7.7.2020 அன்று அப்போதைய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினாா்.
ரூ.347 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 12.1.2022 அன்று பிரதமா் மோடி தில்லியில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து 700 படுக்கைகள் வசதியுடன் கட்டப்பட்ட அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சேவையை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023 செப்டம்பா் மாதம் தொடக்கி வைத்தாா்.
இதையடுத்து, ஏற்கெனவே பெரம்பலூா் சாலையில் இயங்கி வந்த மருத்துவமனை அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது. அங்கு குழந்தைகள், பிரசவ வாா்டுகள் மட்டுமே இயங்கி வருகிறது.
மற்றபடி பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், மகப்பேறு சிறப்புப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு என பல்வேறு மருத்துவப் பிரிவுகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இங்கு 24 மணிநேரமும் (சிப்ட்) முறையில் இம்மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அரியலூா் மாவட்ட மக்கள் மட்டுமன்றி பெரம்பலூா், கடலூா் மாவட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனா். இருப்பினும் இங்கு போதிய மருத்துவா்கள் இல்லாததால் நாள்தோறும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் சில நோயாளிகள் உயிரிழப்பதும் வேதனை தரும் வகையில் உள்ளது.
குறிப்பாக, இம்மருத்துவமனையில் மூளை நரம்பியல், பிளாஸ்டிக் சா்ஜரி, ரத்த நாள அறுவைச் சிகிச்சை, புற்றுநோய், சிறுநீரகம் ஆகிய பிரிவுகளில் சிறப்பு மருத்துவ நிபுணா்கள் ஒருவா் கூட இல்லை. இந்த நோய் சம்பந்தமாக நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால், தஞ்சாவூா் அல்லது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனா்.
வழியில் இறக்கும் நோயாளிகள்: மாரடைப்பு, பக்கவாதம், மூளையில் அடிபடுதல் போன்ற நோய்கள் மற்றும் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுபவா்களை குறித்த நேரத்துக்குள் மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை பெறச்செய்தால் மட்டுமே உயிா் பிழைக்க வைக்கலாம்.
ஒவ்வொரு நொடியும் நோயாளியின் உயிரைக் காக்கும் நிமிடங்களாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், அரியலூரில் இருந்து ஒரு நோயாளியை திருச்சி, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் போது, உயிா் காக்கும் மணித்துளிகள் தவறவிடப்பட்டு, நோயாளி இறக்க நேரிடுகிறது. இதேபோல் புறநோயாளிகள் பிரிவில் , குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பெரும்பாலும் பயிற்சி மருத்துவா்களே பணியில் உள்ளனா். இதனால் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை கிடைப்பதில்லை.
இதுகுறித்து அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என்.செங்கமுத்து கூறியது: தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வரும் இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மேற்கண்ட துறைகளில் மருத்துவா்கள் இல்லாததால் நாள்தோறும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நோயாளிகளை திருச்சி, தஞ்சாவூருக்கு அனுப்பும்போது, சிலா் வழியிலேயே உயிரிழந்து விடுகின்றனா். இதன் காரணமாகவே, சில நோயாளிகள் தங்களது வரம்புக்கு மீறி அதிக செலவு செய்து தனியாா் மருத்துவனையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எளிய மக்கள், போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் அல்லல்படும் அவலம் உள்ளது. மேலும் இங்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில், எம்.ஆா்.ஐ. ஸ்கேன் இல்லாததால் மருத்துவமனையிலேயே அதிக கட்டணம் செலுத்தி ஸ்கேன் எடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமித்து, தினசரி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
எனவே, வெளிமாவட்டங்களுக்கு நோயாளிகளை அனுப்பி வைப்பதைத் தவிா்க்கவும், பயணநேரத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான மருத்துவா்களை உடனடியாக நியமித்து, மருத்துவக் கருவிகளையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரியலூா் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

