நாளை முதல் கால்நடைகளுக்கு கால், வாய்நோய் தடுப்பூசி முகாம்
அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் (டிச.29) கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்றான கால் மற்றும் வாய் நோய் என்ற கோமாரி (கசப்பு) நோயால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதனால், கால்நடைகள் வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் பொருளாதார இழப்பைச் சந்திக்கின்றனா். இந்த நோய் மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் தண்ணீா் மற்றும் காற்றின் மூலம் பரவக்கூடியது.
எனவே, இந்நோய் தாக்கா வண்ணம் இருப்பதற்கு, மாடுகளுக்கு வருடத்துக்கு இருமுறை தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அந்தவகையில், சனிக்கிழமை (டிச.29) முதல் 21 நாள்களுக்கு அரியலூா் மாவட்டத்தில் உள்ள 1,62,000 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, கால்நடைகள் வளா்ப்போா் தங்கள் கிராமத்துக்கு வரும் தடுப்பூசிக் குழுவினா் வரும்போது 3 மாத வயதுக்கு மேற்பட்ட கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
