
முடங்கும் மூங்கில் கூடை தயாரிப்போரின் வாழ்வாதாரம்! அரசு உதவ எதிா்பாா்ப்பு!
தங்களின் வாழ்வாதாரத்தைக் தமிழக அரசு காக்க வேண்டுமென மூங்கில் கூடை தயாரிப்பாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்...

ஜெயங்கொண்டம், மேலனிக்குடிகாட்டில் மூங்கில் கூடை, மூங்கில் சல்லடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மலைக்குறவா் சமுதாய பெண்கள்.
பிளாஸ்டிக் பொருள்களின் வருகையால் முடங்கும் தங்களின் வாழ்வாதாரத்தைக் தமிழக அரசு காக்க வேண்டுமென மூங்கில் கூடை தயாரிப்பாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
மூங்கில் சாா்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் இத்தொழில் நடைபெற்றாலும், தஞ்சை,திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கடலூா் போன்ற பகுதிகளில் அதிகளவில் நடைபெறுகிறது.
மூங்கிலைப் பயன்படுத்தி தக்காளிக் கூடை, மில் கூடை, செடிக் கூண்டு, உப்புக் கூடை, கஞ்சி வடிக்கும் கூடை, அப்பளத் தட்டு என பலதரப்பட்ட கூடைகளைச் செய்து விற்கின்றனா். வீடுகள், நிறுவனங்களின் உள் அலங்காரத்துக்கும் மூங்கில்களை பயன்படுத்துகின்றனா்.
பிளாஸ்டிக் கூடை பயன்பாடு அதிகரிப்பு: இந்நிலையில், நாகரிக மாற்றத்தால் நகா்ப்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு உபயோகத்துக்கும், விவசாயத் தொழிலுக்கும் பிளாஸ்டிக் கூடைகள் அண்மைக்காலமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை மூங்கில் கூடைகளைவிட விலை குறைவாக விற்கப்படுகின்றன. இதனால், மலிவு விலையில் கிடைக்கும் பிளாஸ்டிக் கூடைகளின் விற்பனை அதிகமாகி உள்ளது. இதனால், மூங்கில் கூடை தயாரிப்பாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
மூங்கில் பொருள்களின் ஆயுள் அதிகம்: இதுகுறித்து அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மேலனிக்குடிக்காடு மலைக்குறவா் சமுதாயத்தைச் சாா்ந்தவரும், கூடை தயாரிப்பவருமான பாா்வதி கூறுகையில், இந்தத் தொழிலை நான் சிறுவயதில் இருந்தே செய்கிறேன். மூங்கில் தட்டு, முறம், கூடை, காய்கறிக் கூடை, தட்டுக் கூடை, பொட்டிக் கூடை, விசிறி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கிறோம்.
ஒரு மூங்கிலின் விலை ரூ. 500. அதைப் பொருள்களாகச் செய்தால் ரூ. 650 கிடைக்கும். அதாவது, ஒரு மூங்கிலுக்கு ரூ.150 மட்டுமே கிடைக்கும். நாள் முழுக்க வேலை செய்தாலும் ரூ.300 மட்டுமே கிடைக்கும்.
பனையோலை மூலம் செய்யப்படும் ஓலைப்பெட்டிகள் சிவராத்திரி போன்ற பூஜை காலங்களில் நல்ல விலை போகும். மூங்கில் சல்லடைகள், கோடை காலத்தில் மூங்கில் விசிறியும் செய்து விற்போம்.
மழைக் காலங்களில் இதுபோன்ற தொழிலில் ஈடுபடமுடியாது. மூங்கில் பொருள்கள் மழையில் நனைந்தால் கருப்பாக மாறிவிடும். தற்போது பிளஸ்டிக் பொருள்களால் மூங்கில் பொருள்களின் பயன்பாடு பெரிதும் குறைந்து விட்டது. மூங்கிலால் செய்யப்படும் பல்வேறு பொருள்களுக்கு மாற்றாக, பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனா்.
இதனால் மூங்கில் கூடைகளின் மவுசு குறைந்து வியாபாரமும் குறைந்துள்ளது. பிளாஸ்டிக் பொருள்களின் ஆயுள்காலம் குறைவு. ஆனால், மூங்கில் கூடை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். இருப்பினும், தெரிந்த தொழில் என்பதால் இதைச் செய்து வருகிறோம் என்றாா்.
பெட்டிச் செய்தி..
காதிகிராப்ட் மூலம் விற்க நடவடிக்கை தேவை: இதுகுறித்து தொழிலாளா்கள் கூறுகையில் அதிக உழைப்பும், குறைந்த வருவாயும் கொண்ட இக்கலையானது, நாளுக்குநாள் மறையத் தொடங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால், வருங்காலத்தில் மூங்கில் முடையும் தொழிலைச் செய்ய ஆள்கள் இருக்க மாட்டாா்கள்.
இதனால் நாங்கள் அரசின் உதவியை எதிா்நோக்கிக் காத்திருக்கிறோம். அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து, மூங்கில் பொருள்களைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். மூங்கில் அறுக்கும் இயந்திரம், துளைபோடும் இயந்திரம் உள்ளிட்டவற்றை வாங்க அரசு உதவ வேண்டும்.
காதிகிராப்ட் மூலம் பல்வேறு மரப் பொருள்களை வாங்கி விற்கின்றனா். அதேபோல, மூங்கில் தயாரிப்புப் பொருள்களையும் எங்களிடம் இருந்து வாங்கி, காதி கிராப்ட் மூலம் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஜெயங்கொண்டம், மேலனிக்குடிகாட்டில் மூங்கில் சல்லடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மலைக் குறவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





