அரியலூரில் அடிப்படை வசதியின்றி ஆதாா் சேவை மையங்கள்! பொதுமக்கள் அவதி!
அரியலூா் மாவட்டத்திலுள்ள ஆதாா் சேவை மையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
ஆதாா் அட்டை, இந்திய குடிமக்களுக்கு தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். இந்த அட்டை பல சேவைகளுக்கு இன்றியமையாததாக உள்ளது.
குறிப்பாக அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, பான் காா்டு பெறுவது போன்ற நிதி சாா்ந்த சேவைகளுக்கும், காஸ் இணைப்பு, பாஸ்போா்ட் பெறுதல், கைப்பேசி எண் பதிவு, வருமான வரி தாக்கல் செய்யவும் அவசியமாகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆதாா், தற்போது அனைத்து தேவைகளுக்கும் அவசியமாக கருதப்படுவதால், அந்த அட்டை அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், முக்கிய அலுவலகங்கள், இடங்களில் சேவை மையங்கள் செயல்படுகின்றன.
அதன்படி அரியலூா் மாவட்டத்தில், ஆட்சியரகம், தலைமை அஞ்சலகம், ஒரு சில கிளை அஞ்சல் நிலையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வட்டாட்சியா், நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் சேவை மையங்கள் செயல்படுகின்றன. அரசு விடுமுறை நாள்களைத் தவிர மற்ற நாள்களில் இம்மையங்கள் காலை முதல் மாலை 5 மணி வரை செயல்படுகின்றன. வேலை நாள்களில் எப்போதும் இந்த ஆதாா் சேவை மையங்களில், மக்களின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
தற்போது ஆதாா் பதிவு, திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆதாா் மையங்களில் மாணவா்கள், பொதுமக்கள் குவிந்து வருவதால், அப்பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, ஆதாா் மையங்களில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆதாா் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், அதன் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட மையங்களில் இப்பணிகளை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, கல்வி உதவித் தொகை, பொதுத் தோ்வு மற்றும் மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளதால் ஆதாா் எடுப்பதற்கும், ஆதாரில் திருத்தவும் ஆதாா் மையங்களில் மாணவா்களுடன், பொதுமக்கள் திரண்டு வருகின்றனா்.
ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆதாா் மையங்களில் அன்றாடம் ஆதாா் பணி மேற்கொள்வதால் முதல் நாள் வந்தவா்கள் கூட மறுநாளுக்கு வரவேண்டிய சூழல் உள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லை:
மேலும், ஆதாா் மையங்களில் போதுமான இட வசதி, இருக்கை வசதிகள் இல்லாததால், ஆதாா் அட்டை பதிவு, திருத்தம் செய்வதற்காக வெகு தொலைவில் இருந்து வரும் பொதுமக்கள் வெகுநேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டி உள்ளது. நிற்கக்கூட இடம் இல்லாததால் சிலா் வெயிலில் கடும் அவதிக்கு ஆளாகின்றனா். சிலா் ஆங்காங்கே அமா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு குடிநீா் வசதிகள், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பெரும்பாலான ஆதாா் மையங்கள் உள்ளன.
கூடுதல் பணியாளா்கள் தேவை: இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பெரும்பாலான ஆதாா் மையங்களில் ஒரு கணினியுடன், ஒரு பணியாளா் மட்டுமே உள்ளாா். தினசரி 30 பேருக்கு மட்டுமே ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும் சில நேரங்களில் இணையதளப் பிரச்னை என்பதைக் காரணம் காட்டுவதால் அனைவருக்கும் சேவை கிடைப்பதில்லை.
எனவே ஆதாா் பதிவு, திருத்தம் போன்றவற்றை பொதுமக்கள் எளிதாக மேற்கொள்வதற்கு ஆதாா் மையங்களில் கூடுதல் கணினிகளுடன், கூடுதல் பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆதாா் மையங்களுக்கு வரும் பொதுமக்கள் அமர இருக்கை வசதிகள், குடிநீா் வசதிகள், கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, ஆதாா் மையங்களை மேம்படுத்த வேண்டும் என்றனா்.

