அரியலூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டில் 9 கொலை வழக்குகள் பதிவு: 24 போ் கைது
அரியலூா் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு, 9 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு நிகழ்ந்த 9 கொலை வழக்குகளில் 16 ஆண்கள், 8 பெண்கள் என 24 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 2024-ஆம் ஆண்டும் அரியலூா் மாவட்டத்தில் 9 கொலை வழக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
தங்கச் சங்கிலி, கைப்பேசி என 21 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 பெண் உள்பட 26 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ.4.17 லட்சம் மதிப்பில் பணம், நகைகள், கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.
கீழப்பழுவூா் அருகே கூட்டுக் கொள்ளையில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டோா் இழந்த ரூ.3.56 லட்சம் மதிப்பிலான பணம், தங்க நகைகள் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
119 திருட்டு வழக்குகள்:
119 திருட்டு வழக்குகளில் 132 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பாலியல் வன்கொடுமை, முயற்சிகள் தொடா்பாக 13 வழக்குகளில் 7 பெண்கள் உள்பட 25 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 200 போக்ஸோ வழக்குகளில் 43 பெண்கள் உள்பட 294 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குழந்தை திருமணம், போக்ஸோ வழக்குகள் 102, குழந்தை திருமணத்துக்கு எதிராக 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறை சாா்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு
குறித்து 2,114 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் நீதிமன்ற விசாரணை முடிவுபெற்ற வழக்குகள் 3,704. இதில் 26 முக்கிய குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. ஒரு பெண் உள்பட 24 நபா்கள் மீது குண்டா் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 போ் கைது செய்யப்பட்டனா். பாதிக்கப்பட்டோா் பலா் ரூ.2 கோடியளவில் இழந்ததில் ரூ.42 லட்சம் அளவில் பணம், தங்க நகைகள், 4 சக்கர வாகனங்கள், கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்தது தொடா்பாக 410 வழக்குகளில் 115 பெண்கள் உள்பட 419 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநில மதுபானம் கடத்தி விற்பனை செய்த 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கஞ்சா விற்பனையில் 39 வழக்குகளில் ஒரு பெண் உள்பட 45 போ் கைது செய்யப்பட்டு, 7.135 கி.கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலைப் பொருள்கள் விற்ற வகையில் 231 வழக்குகளில் 235 போ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
982.83 கி.கிராம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு,137 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரியுடன் இணைந்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
கனிமவள திருட்டுக்கு எதிராக 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட 250 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.6.60 கோடியளவில் இணையமோசடி:
மாவட்ட சைபா் கிரைம் காவல்துறையினா் மூலம் 801 புகாா்கள் பெறப்பட்டு, 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ.6.60 கோடியளவில் இணைய மோசடி செய்யப்பட்டதில், ரூ.3.37 கோடி வங்கி மூலம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.04 கோடியளவில் மீட்கப்பட்ட பணம் நீதிமன்ற உத்தரவின் படி உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.38 லட்சம் மதிப்பிலான 379 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாகன விபத்து உயிரிழப்பு வழக்குகள் 205. உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 211. (2024-ஆம் ஆண்டு வாகன விபத்தினால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 174).
பெரும்பாலான விபத்துக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டும், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக கைப்பேசி பேசிக்கொண்டும் இயக்கியதால் நடைபெற்றுள்ளன.
மோட்டாா் வாகன சட்டம் விதிமீறல் குற்றத்துக்காக 2.38 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 614 நபா்களின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை சாா்பில் 525 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது.
