வனவிலங்குகளிடமிருந்து பயிா்களை காக்க நடவடிக்கை தேவை: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டத்தில், வனவிலங்குகளிடமிருந்து பயிா்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
அரியலூா் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: சுக்கிரன் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும்.நெல் கொள்முதல் நிலையங்களில், கையூட்டு இல்லாமல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்தல் செய்ய வேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து லாரிகள் சாலைக்கு வரும் பகுதியில் சுமாா் 500 மீட்டருக்கு தாா்சாலை அல்லது சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். தனியாா் உரக்கடைகளில் உரங்களுடன் சில பொருள்களை கட்டாயம் பெறச் செய்வதை தடுக்க வேண்டும். கோயில் நிலத்தில் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளிடமிருந்து குத்தகை பணத்தை வசூலிக்க வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ.விசுவநாதன்: அரியலூா் மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளின் கனிம சுரங்க நிதியை கொண்டு ஏரி, குளங்களை தூா்வார வேண்டும். முந்திரி பழச்சாறு மற்றும் முந்திரி கொட்டை தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.விவசாய மின் இணைப்புகளில் இருந்து வயா்களை திருடும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்து, அரசாணைக்காக காத்திருக்கின்ற விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் மின் இணைப்புகளை வழங்க வேண்டும்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு தலைவா் தங்க.சண்முகசுந்தரம், விவசாயி விஸ்வநாதன்: நிகழாண்டுக்குள் மருதையாற்றை முழுமையாக தூா்வார வேண்டும். காட்டுப்பன்றி, மயில், குரங்குகளால் பயிா்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் கோடை நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், வரத்து வாய்க்கால்களை தூா்வார வேண்டும். சில பகுதிகளில் விவசாய கடன் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்றனா்.
தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். முன்னதாக தங்கத்தின் விலையை குறைக்க பிரதமா் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மஞ்சள் தாலி கயிற்றுடன் வந்து மனு அளித்தனா்.
கூட்டத்தில், தியாகிகள் தினத்தையொட்டி, சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு 2 நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. கூட்டத்தில், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் எம். உமா மகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநா் உலகம்மை முருககனி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

