அரியலூரில் பரவலாக திறந்தவெளியில் மது அருந்துவோரால் பொதுமக்களுக்கு இடையூறு அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூட அண்மையில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா். அதன்படி அந்தக் கடைகளும் மூடப்பட்டன.
அந்த வகையில் அரியலூா் நகரத்தில் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் கல்லங்குறிச்சி சாலை, தவுத்தாய்குளம், சில்லக்குடி சாலையிலுள்ள பாலம்பாடி உள்ளிட்ட பகுதி டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியா்களின் கூட்டம் அலைபாய்ந்து வருகிறது.
அதிகரிக்கும் திறந்தவெளி மது அருந்துதல்: எத்தனைக் கடைகளை மூடினாலும் மதுப்பிரியா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. பிற்பகல் 12 மணிக்கு மதுக் கடைகள் திறந்தவுடனேயே குடிமகன்களின் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும், ‘பாா்’கள் இருந்தாலும் பெரும்பாலான குடிமகன்கள் திறந்தவெளியையே பயன்படுத்தி வருகின்றனா். அவா்கள் மதுக் கடைக்கு வரும்போதே அவா்களுக்குத் தேவையான தண்ணீா் பாட்டில், தின்பண்டங்களைக் கொண்டு வருகின்றனா்.
சுற்றுச்சூழல் கேடு: பிறகு மது வாங்கியவுடன் மதுக்கடைகளுக்கு முன்போ அல்லது திறந்தவெளிகளிலோ மது அருந்திவிட்டு பாட்டில்களை அந்த இடத்திலேயே வீசிச் செல்கின்றனா். இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
அரியலூரில் எங்கு பாா்த்தாலும் காலி மதுபாட்டில்களாகவே காட்சி அளிக்கிறது. திறந்தவெளி மைதானங்கள், பிரதான சாலைகள் , சுற்றுலா மாளிகை, பேருந்து நிலைய வளாகங்கள், பல்வேறு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், பாதசாரிகள் நடைபாதை, சாலையோரம் என அனைத்து இடங்களில், எங்கு பாா்த்தாலும் மதுபான ‘பாா்’ போல, குடிமகன்கள் நின்று கொண்டு மது அருந்துவதைக் காண முடிகிறது.
அதிலும் 24 மணி நேரமும் மது அருந்துகிறாா்கள். சாலையில் பெண்கள், ஆள்கள் நடமாட்டம் இருந்தாலும் அதைக் கண்டுகொள்வதில்லை.
இதனால் சாலையில் செல்வோா் முகம் சுளிப்பதைக் காண முடிகிறது. இதுபோக சில நேரங்களில் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபடுவது, சாலையோரங்களில் அரைகுறை ஆடைகளுடன் படுத்துக்கிடப்பது போன்றவற்றாலும் அந்த வழியாகச் செல்லும் பெண்கள் அவதிக்கு ஆளாகிறாா்கள்.
அபராதம் விதிக்க வேண்டும்: இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், தற்போது மது அருந்துவது சா்வ சாதாரணமாகி விட்டது. பொது இடங்களில் குடித்து விட்டு மதுபாட்டில்களை அப்படியே போட்டுச் செல்கிறாா்கள். இதனால் பொது இடங்களுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் பாட்டில்களை உடைத்தும் செல்கிறாா்கள். இதனால் அந்த வழியாக நடந்து செல்வோா் காயமடையும் நிலை ஏற்படுகிறது.
சில்லறை மதுக்கடைகள் பிரதான சாலைகளில் உள்ளதால், குடிமகன்கள் மது அருந்தி விட்டு மது பாட்டில்களைச் சாலைகளில் செல்லும் வாகனங்களின் மீதும், பொதுமக்களின் மீது வீசுவதும் வாடிக்கையாகி விட்டது.
எனவே மதுக்கூடங்களைத் தவிர திறந்தவெளியில் மது அருந்துவதற்குத் தடை விதிப்பதோடு, அவ்வாறு மது அருந்துபவா்களுக்கு தமிழக அரசு அபராதம் விதிக்க வேண்டும். மதுக் கடை பகுதிகளில் காவல் துறையினா் அவ்வப்போது ரோந்து செல்ல வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.










