இயற்கை இடர்பாடுகளில் இருந்து இழப்பைத் தவிர்க்க, விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, கிருஷ்ணராயபுரம் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் (பொறுப்பு) மணிமேகலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்காக பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டம், மாநில அரசின் மானியத்துடன் 2017-18-ஆம் ஆண்டிற்கான ரபி பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குதல், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்தல, நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க ஊக்குவித்தல், உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்தை தவிர்த்து உணவு பாதுகாப்புக்கு தொடர்ந்து கடனுதவி கிடைப்பதை உறுதிசெய்வது ஆகியன இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விதைப்பு தவிர்த்தல் , தோல்வியுறுதல் , பயிரிட அபாயம் ஏற்படும் சூழ்நிலைகள், விதைப்பு முதல் அறுவடை வரையுள்ள பயிர்காலத்தில் ஏற்படும் இடர்பாடுகள், வெள்ளம், வறட்சி, வறண்ட வானிலை, வெள்ள நீர் தேங்குதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகள், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்படுகிறது.
முன்பொழிவு படிவம், சிட்டா, ஆதார் அட்டை நகல், விவசாயிகள் பதிவு விண்ணப்பம், வங்கி கணக்கு புத்தகம், அடங்கல் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
இதில், நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20,850 பயிர் காப்பீடு பெற ரூ.402.75 பிரிமீயமாக செலுத்த வேண்டும். மக்காச்சோளத்துக்கு ரூ.12,400 பெற ரூ.276-ம், சோளத்திற்கு ரூ.9,350 பெற பிரிமியம் ரூ.140.25-ம், உளுந்து மற்றும் துவரைக்கு ஏக்கருக்கு ரூ.13,000 பெற ரூ.195-ம், நிலக்கடலைக்கு ரூ.22,650 பெற, ரூ.339.75-ம், எள் காப்பீட்டுக்கு ரூ.10,900 பெற ரூ.163.50-ம், கரும்புக்கு ரூ.50,000 பெற ரூ.2500-ம் செலுத்த வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் சேர வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.