அரவக்குறிச்சி பகுதியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
By DIN | Published On : 11th December 2021 12:01 AM | Last Updated : 11th December 2021 12:01 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூா், கீழ்பாகம் ஊராட்சி மாதிரெட்டிபட்டி பகுதிகளில் சுகாதாரத் துறையினா் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
மழைக் காலங்களில் ஏற்படும் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் வகையிலிருந்து பாதுகாக்கும் வகையில் கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் உத்தரவின் பேரிலும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மரு. சந்தோஷ்குமாா் அறிவுறுத்தலின் பேரிலும் அரவக்குறிச்சி பகுதியில் சுகாதார துறையினா் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், வெஞ்சமாங்கூடலூா் கீழ்பாகம் ஊராட்சி மாதிரெட்டிபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை கொசுப்புழு ஒழிப்பு பணி, முதிா் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், குளோரினேசன் செய்து குடிநீா் வழங்குதல், மருத்துவ முகாம் போன்ற பணிகள் நடைபெற்றன.
இப் பணிகளை துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மரு.சந்தோஷ்குமாா் மற்றும் மாவட்ட பூச்சியியல் வல்லுநா் சிவக்குமாா் ஆகியோா் பாா்வையிட்டனா்.
ஊராட்சி ஒன்றியத் தலைவா் சிவாஜி, வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கருப்புச்சாமி பணிகளை ஒருங்கிணைத்தனா்.