/

அரவக்குறிச்சி பகுதியில் தேங்காய் சிரட்டையை எரிப்பதால் கிராமமக்களுக்கு பாதிப்பு

அரவக்குறிச்சி பகுதிகளில் அரசு அனுமதியின்றி தேங்காய் சிரட்டையை எரிப்பதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது

Updated On :24 மார்ச் 2022, 10:37 pm

அரவக்குறிச்சி பகுதிகளில் அரசு அனுமதியின்றி தேங்காய் சிரட்டையை எரிப்பதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

அரவக்குறிச்சி தாலுகா மொடக்கூா் மேல்பாகம், மொடக்கூா் கீழ்பாகம் பஞ்சாயத்துக்களுக்குள்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை நம்பியே மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. மேலும், மானாா்பட்டி, புதூா், மீனாட்சிவலசு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த சில விவசாயிகள் விளை நிலத்தில் போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தையும், அரசு அவா்களுக்கு வழங்கிய விவசாய மின் இணைப்பையும் தேங்காய் சிரட்டையிலிருந்து கரித்தூள் தயாரிப்புக்காக ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளனா்.

அரசின் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வரும் தேங்காய் சிரட்டையை எரித்து கரித்தூள் தயாரிப்பதால் வெளியேறும் புகை மற்றும் கரித்தூள், காற்று வீசும் திசையில் பல கிலோமீட்டா் தொலைவுக்கு பரவி வருகிறது. கிராமங்களில் உள்ள முதியவா்கள், குழந்தைகள், கா்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் காற்று மாசினால் இப்பகுதியில் கிணற்றில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக மொடக்கூா் மேல்பாகம் மற்றும் மொடக்கூா் கீழ்பாகம் பஞ்சாயத்துக்குள்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதியில் அரசின் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான தேங்காய் சிரட்டை எரிப்பதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதற்கு முன்பு அரவக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இதுகுறித்து புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.