கரூர் அருகே கல்குவாரியில் லாரி மீது ராட்சத பாறை சரிந்துவிழுந்ததில் ஓட்டுநர் பலி

கரூர் அருகே கல்குவாரியில் 300 அடி ஆழத்திற்குள் இருந்து கற்களை ஏற்றி மேல்நோக்கி வந்துகொண்டிருந்த லாரி மீது ராட்சத பாறை சரிந்துவிழுந்ததில் ஓட்டுநர் உடல்நசுங்கி இறந்தார். 
கரூர் அருகே விபத்து நடந்த கல்குவாரி.
கரூர் அருகே விபத்து நடந்த கல்குவாரி.

கரூர் அருகே கல்குவாரியில் 300 அடி ஆழத்திற்குள் இருந்து கற்களை ஏற்றி மேல்நோக்கி வந்துகொண்டிருந்த லாரி மீது ராட்சத பாறை சரிந்துவிழுந்ததில் ஓட்டுநர் உடல்நசுங்கி இறந்தார். 
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தை அடுத்த காங்கேயம்பாளையம் தனியார் கல்குவாரியை நாமக்கல்லைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் நடத்தி வருகிறார். சுமார் 300 அடி ஆழம் கொண்ட அந்த கல் குவாரியில் வெட்டப்படும் பாறைக்கற்களை டிப்பர் லாரியில் ஏற்றி கற்கள் உடைக்கும் பகுதியான கிரசருக்கு கொண்டுவருவது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாறைக்குழிக்குள் வெட்டப்பட்டிருந்த கற்களை டிப்பர் லாரியில் ஏற்றி மேலே கொண்டு வரும்பணியில் கரூர் சேங்கலை அடுத்த பாப்பையம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா (40) என்பவர் ஈடுபட்டிருந்தார். இரவு 11 மணியளவில் கற்களை ஆழமான பகுதியில் இருந்து ஏற்றிக்கொண்டு மேல்நோக்கி சுமார் 150 அடி ஆழ பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பக்கவாட்டில் இருந்த சுமார் 3,000 டன் எடைகொண்ட ராட்சத பாறை திடீரென சரிந்து லாரி மீது விழுந்தது. இதனால் சுப்பையா லாரியின் இடிபாடுக்குள் சிக்கிக்கொண்டார். 

மேலும் பாறை விழுந்ததில் டீசல் டேங்க் உடைந்து லாரியில் தீப்பிடித்தது. இதனைக்கண்ட குவாரிக்குள் ஆழமான பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறையை உடைத்துக்கொண்டிருந்த பொக்லைன் ஓட்டுநர்கள் 2 பேர் மற்றும் கற்களை லாரியில் ஏற்றும்பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் என மொத்தம் 4 பேரும் மேல்நோக்கி ஓடிவந்துள்ளனர். ஆனால் லாரி செல்லும் பாதை முழுவதும் அடைக்கப்பட்டதால் அவர்களால் லாரிக்குள் சிக்கிய சுப்பையாவை மீட்க முடியவில்லை. மேலும் அவர்களும் மேலே வரமுடியாமல் குவாரியின் ஆழமான பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புகளூர் தீயணைப்பு நிலையத்தினர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்று பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. 
மேலும் பாறை அகற்றும்போது, பாறை ஆழமான பகுதிக்குள் விழுந்தால் அங்கு சிக்கியிருக்கும் 4 பேருக்கும் ஏதாவது உயிர்சேதம் வந்துவிடும் என அஞ்சினர். மேலும் தகவல் கிடைத்ததும் அரவக்குறிச்சி கோட்ட துணைக்காவல்கண்காணிப்பாளர் முத்துச்செல்வன் தலைமையில் ஏராளமான போலீஸாரும் குவாரிபகுதியில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து மீட்கும் பணி திங்கள்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணியளவில் ஆழமான பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பான இடத்தில் நிற்கவைத்து லாரி மீது இருந்த ராட்சத பாறையில் ஓட்டைப்போட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது. பின்னர் லாரிக்குள் சிக்கி இறந்த சுப்பையாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
சுமார் 14 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆழமான பகுதியில் சிக்கியிருந்த பொக்லைன் இயந்திர ஓட்டுநர்கள், பணியாளர்கள் 4 பேரும் மீட்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு உணவு, தண்ணீர் ஆகியன கயிற்றுமூலம் தீயணைப்பு வீரர்கள் வழங்கினர். மேலும் இந்த விபத்து தொடர்பாக க.பரமத்தி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com