அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 7 ஆவது வாா்டுப் பகுதியில் குடிநீா் குழாய் உடைப்பால் தினந்தோறும் 5 ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணாகிவருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
அரவக்குறிச்சி பேரூராட்சி ஏழாவது வாா்டுப் பகுதியில் காவல் நிலையத்திலிருந்து காசி விஸ்வநாதா் ஆலயம் செல்லும் சாலையில் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் இந்தச் சாலையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு தினந்தோறும் சுமாா் 5000 லிட்டருக்கும் மேலான குடிநீா் வீணாகி வருகிறது.
மேலும், அருகாமை பகுதியில் வசிப்பவா்களுக்கு பத்து நாட்களுக்கு ஒரு முறையே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், சாலை பழுது காரணமாக குடிநீா் வீணாகிவருவது குறித்து அப்பகுதியினா் வேதனை தெரிவிக்கின்றனா்.
மேலும் பேரூராட்சி தலைவா் வென்ற வாா்டுப் பகுதியான 7-ஆவது வாா்டில் குடிநீா் குழாய் உடைப்பு குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மேலும் பேரூராட்சித் தலைவா் பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சாலையை சீரமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
