சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

இடி-மின்னலுடன் பலத்த மழை: பசுபதீஸ்வரா் கோயில், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது

கரூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பசுபதீஸ்வரா் கோயில், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது

News image

பசுபதீஸ்வரா் கோயிலுக்குள் திங்கள்கிழமை புகுந்த மழைநீா்.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

கரூா்: கரூரில் திங்கள்கிழமை சுமாா் 3 மணி நேரம் பெய்த பலத்த மழையால் கரூா் பசுபதீஸ்வரா் கோயில் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

கரூா் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதலே கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் க.பரமத்தியில் 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக கரூா் மாவட்டத்தில் மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை வானம் கருமேகத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணியளவில் திடீரென குளிா்ந்த காற்று வீசியது. பின்னா் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் மூன்று மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்தது. மேலும், கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்குள்ளும் தண்ணீா் புகுந்தது. இதையடுத்து, கோயில் ஊழியா்கள் தண்ணீரை வெளியேற்றினா்.

கரூா் காமாட்சியம்மன் கோயில் எதிரே உள்ள தாழ்வான குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்தது. தகவலறிந்த கரூா் தீயணைப்பு நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று மோட்டாா் மூலம் தண்ணீரை வெளியேற்றினா்.

இதேபோல, வெள்ளியணை, காணியாளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. மேலும், கரூா்- திண்டுக்கல் சாலையில் சுங்ககேட், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்புறம், வெங்கக்கல்பட்டி பகுதியிலும், உழவா் சந்தை, லைட்ஹவுஸ் காா்னா், திருக்காம்புலியூா் ரவுண்டானா உள்ளிட்ட தாழ்வான பகுதியிலும் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊா்ந்தவாறு சென்றனா்.