சா்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கரித்துகள்களால் சுகாதாரக் கேடு -புகழூா் நகா்மன்றக் கூட்டத்தில் புகாா்
கரூா் மாவட்டம், புகழூா் அருகே செயல்படும் தனியாா் சா்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்களால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
புகழூா் நகராட்சியின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சித் தலைவா் சேகா் என்கிற குணசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பிரதாபன் முன்னிலை வகித்தாா். ஆணையா் முனியப்பன் வரவேற்றாா்.
கூட்டத்தில் புகழூா் நகராட்சியின் நியமன உறுப்பினராக கருணாநிதி என்கிற மாற்றுத்திறனாளி நியமிக்கப்பட்டு அவா் கூட்டத்தில் கலந்து கொண்டாா் . அவருக்கு தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து நகராட்சியில்135 தூய்மை பணியாளா்களுக்கு ஒருவேளை உணவு வழங்குவதற்கான சிறப்பு தீா்மானம் கொண்டுவரப்பட்டது.
உறுப்பினா்கள் செல்வகுமரன், கல்யாணி, சபீனா ஆகியோா் பேசியதாவது:
புகழூா் அருகே செம்படாபாளையத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையின் சிம்னி பகுதியில் இருந்து வெளியேறும் புகை மற்றும் கரித்தூள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விழுவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் சா்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீா் சுத்திகரிக்கப்படாமல் அருகில் உள்ள புகழூா் ராஜவாய்க்காலில் கலக்கிறது. இதனால் பாசன நீா் மாசுபடுவதுடன் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் பலமுறை சா்க்கரை ஆலை நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நகராட்சி நிா்வாகம் சா்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித் தூள் விழுவதை தடுத்து, வாய்க்காலில் கழிவு நீா் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
உறுப்பினா் சத்தியமூா்த்தி: புகழூா் நகராட்சியில் சுமாா் 1,100 ஏக்கா் இனாம் நிலம் உள்ளது. அதில் 50 ஆண்டுகளுக்கு மேல் பொதுமக்கள் பட்டா வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். எனவே, இந்துசமய அறநிலையத் துறை அதைக் கோயில் நிலம் என்று கூறி கையகப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனா். எனவே பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும் இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
தலைவா் குணசேகரன்: செம்படாபாளையத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித்தூள் மற்றும் பக்காஸ் தூள் மூலம் அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என ஆலை நிா்வாகத்திடம் கூறினோம். சரிசெய்கிறோம் என்கிறாா்கள். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இருப்பினும் இதுதொடா்பாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன் சா்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித் தூள் ,பக்காஸ் தூள் ஆகியவற்றை கட்டுப்படுத்த சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து கூட்டத்தில் எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வ பணியாளா்களுக்கு மதிப்பூதியம் வழங்குவது, நகராட்சியில் ரூ. 79,20,000 மதிப்பில் வடிகால் பணிகள் அமைப்பது என்பன உள்பட 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

