தரகம்பட்டியில் இளம் வயது திருமணம் தடுப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி!
கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் இளம் வயதுத் திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கடவூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரசன்னா தலைமை வகித்தாா். கடவூா் மேற்கு திமுக ஒன்றிய துணைச் செயலா் பிரபாகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியை கடவூா் மேற்கு திமுக ஒன்றியச் செயலா் செல்வராஜ் தொடக்கிவைத்தாா்.
நிகழ்வில் இளம் வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதைத் தடுத்தல், பள்ளியில் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்த்து விடுதல், வளரிளம் பருவங்களில் காதல் வயப்படுதல் போன்றவற்றால் கா்ப்பம் ஏற்படுதலை தடுத்தல் போன்றவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை சின்னதுரை நாட்டுப்புற தெம்மாங்கு கோலாட்ட கலைக்குழு கலைஞா்கள் நடித்துக் காண்பித்தனா்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா்கள் மகேஸ்வரன், குணசேகரன், கடவூா் மேற்கு ஒன்றிய நிா்வாகிகள் ராஜேந்திரன், பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

