எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!

பெண்களின் உடல்நலத்திலும், மனநலனிலும் அதிக அளவிலான எதிர்மறையான தாக்கங்களை இளம் வயது திருமணங்கள் ஏற்படுத்துகின்றன. இதை பெண்கள் நன்கு புரிந்துகொள்வது நல்லது.

News image
குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!- சித்திரிப்பு
Updated On :9 மார்ச் 2026, 11:24 pm

முனைவர் என். பத்ரி

உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள பெண்களில் சுமார் பாதி பேர் 18 வயதுக்கு முன்பும், 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 47 சதவீதம் பேரும் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்வதாக இது சார்ந்து பெறப்பட்டத் தரவுகள் கூறுகின்றன. தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தரவுகள் கடந்த 2 ஆண்டுகளில் இளம் வயது திருமணங்கள் அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7000 இளம் வயது திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

1992 - 93 மற்றும் 2005 - 06-க்கு இடையில், இந்தியாவில் இளம் வயது திருமணங்கள் சுமார் 7% அளவுக்கு குறைந்தது. இருப்பினும், சில மாநிலங்களில் இவ்வாறான திருமணங்கள் இன்னும் 60 சதவீதத்தைவிட அதிகமாக உள்ளது. பிகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இவ்வாறான திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. நகர்ப்புறங்களைவிட கிராமப்புற இந்தியாவில் இந்தப் பிரச்னை மோசமாக உள்ளது.

இந்தியாவின் குழந்தை திருமண தடைச் சட்டம் (2006) பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கு இது 21 ஆண்டு எனவும் கூறுகிறது. மேலும், இந்தச் சட்டம் இளம் வயது திருமணங்களைத் தடுப்பது, இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப் பது, அத்தகைய திருமணங்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும், அவற்றை நடத்துபவர்கள் மீதும் அபராதம் விதித்தல் போன்ற தண்டனைகளையும் சாத்தியப்படுத்தியது.

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 55 சதவீதம் அளவுக்கு இளம் வயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் உரிமைச் சட்டத் தகவல் கூறுகிறது. இளம் வயது திருமணம் நடைபெற்ற பிறகு பிரசவத்துக்காக இளம் பெண்கள் மருத்துவமனைக்கு வரும் போதுதான் இது சார்ந்த விவரம் வெளிச்சத்துக்கு வருகிறது. பின்னர்தான் குற்றவாளிகள் கைதாவதாகவும் கூறப்படுகிறது.

ராமநாதபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் இளம் வயது திருமணம் தொடர்பான புகார்களில் 75 திருமணங்கள் நடைபெற்றதாகவும், 25 திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகவும் தெரியவருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டில் 1054 இளம் வயது திருமணங்களும், 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 1,640 திருமணங்களும் நடைபெற்றுள்ளன. அரியலூரில் 2023-ஆம் ஆண்டு இரண்டாக இருந்த இளம் வயது திருமணம், 2024-ஆம் ஆண்டில் 31-ஆக அதிகரித்துள்ளது. இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் முதல் 10 மாவட்டங்களில் இடங்களை மேற்கு மாவட்டங்கள் பிடித்துள்ளன.

அதன்படி, 2023-ஆம் ஆண்டு ஈரோட் டில் 150 இளம் வயது திருமணங்களும், கோவையில் 90-ம், நாமக்கலில் 74-ம், திருப்பூரில் 66-ம், தருமபுரியில் 58-ம், சேலத்தில் 51-ம் பதிவாகியுள்ளன. 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையில் கோவையில் இளம் வயது திருமணம் தொடர்பாக சமூக நலத் துறைக்கு வந்த 125 புகார்களில் 35 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. நடைபெற்று முடிந்துவிட்ட 90 திருமணங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே காலகட்டத்தில் ஈரோட்டில் பதிவான 186 புகார்களில் 36 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தருமபுரி, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் முறையே 157, 165, 131 இளம் வயது திருமணங்கள் சார்ந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இளம் வயது திருமண சட்டத்தை திறம்படச் செயல்படுத்த தமிழகத்தில் மாவட்ட சமூக நல அலுவலர்கள் இளம் வயது திருமண தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இளவயது திருமணம் தொடர்பாகப் பெறப்படும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், இளம் வயது திருமணத்தை ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்க சட்டப்படி தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். ஆனால், இந்த அலுவலருக்கு வேறு பல பணிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிராமப்புறங்களில் நடைபெறும் இளம் வயது திருமணங்களைத் தடுக்க ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

20 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட கல்வி இல்லாத பெண்களில் 77% பேர் 2005 - 06-ஆம் ஆண்டில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வி பெற்றவர்கள் சார்ந்து இந்த எண்ணிக்கை முறையே 62% மற்றும் 27%-ஆக உள்ளது.

பொம்மலாட்டம், வீதி நாடகம், பேரணி, கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இளம் வயது திருமணத்தின் தீய பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.

பள்ளி இடைநிற்றல்தான் பல நேரங்களில் இளம் வயது திருமணத்துக்குக் காரணமாக அமைகிறது. கல்வித் துறை, சமூக நலத் துறை, காவல்துறை ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து இதுசார்ந்து நடவடிக்கைகள் எடுப்பது நல்ல பலன்களைத் தரும்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்தே பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு முன்பு நடைபெறும் இளம் வயது திருமணங்கள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரத்தில் போக்ஸோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மகளிர் உதவி எண் 181, அவசர உதவி எண் 100 ஆகியவற்றுக்கு இது தொடர்பாக புகார் வரும்போது அதிகாரிகள் இளம் வயது திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

பெண்களின் உடல்நலத்திலும், மனநலனிலும் அதிக அளவிலான எதிர்மறையான தாக்கங்களை இளம் வயது திருமணங்கள் ஏற்படுத்துகின்றன. இதை பெண்கள் நன்கு புரிந்துகொள்வது நல்லது. நாட்டில் அனைத்துப் பெண்களும் இது சார்ந்து மேலும் விழிப்புணர்வைப் பெறுவது அவசர அவசியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.