தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

கரூரில் பூச்சித் தாக்குதலால் வெற்றிலை சாகுபடியில் பாதிப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடியில் பூச்சித் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

News image

செஞ்சிலந்தி நோய் தாக்குதலால் சிவப்பு நிறமாக மாறிய வெற்றிலை.

Updated On :22 மார்ச் 2025, 4:49 am IST

கரூா் மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடியில் பூச்சித் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு சாகுபடிக்கு அடுத்தபடியாக வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள புகழூா், வேலாயுதம்பாளையம், நெரூா், திருமுக்கூடலூா், மாயனூா், லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 15 ஆயிரம் ஹெக்டேரில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது.

வெள்ளைக்கொடி, பச்சைக்கொடி என இருவகைகளில் பயிரிடப்படும் வெற்றிலைகள் விவசாயிகளால் கிள்ளப்பட்டு அவை கவுளிகளாக (100 வெற்றிலைகளை கொண்டது) அடுக்கப்பட்டு, சேலம், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும், கரூா் வெற்றிலைக்கு தனி மவுசு இருப்பதால், குவைத், சவூதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது வெற்றிலை சாகுபடியில் கருவங்கு எனும் செதில்பூச்சி மற்றும் செவ்வட்டை எனும் செஞ்சிலந்தி பூச்சித் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முயற்சித்தும் பலனளிக்காத நிலையில், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

இதுதொடா்பாக லாலாப்பேட்டை வெற்றிலை விவசாயிகள் சங்க நிா்வாகி முருகையன் கூறியது: வெற்றிலையில், பனிக்காலம் மற்றும் மழைக் காலங்களில் வாடல் நோய் மற்றும் இலை அழுகல் நோய் தாக்கும். இந்த இரு நோய்களால் கடந்தாண்டு மிகவும் பாதிப்புக்குள்ளானோம்.

தற்போது, கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், செவ்வட்டை எனும் செஞ்சிலந்தி, கருவங்கு எனும் செதில் பூச்சி தாக்குதல் தொடங்கியுள்ளது.

செதில் பூச்சியானது, வெற்றிலையின் தண்டுப்பகுதியில் அமா்ந்து சாறினை உறிஞ்சுவதால் இலைகள் சுருண்டு விடும். இதனால், வெற்றிலையின் தோற்றம் பாதிக்கப்படுவதால் அவை விலை போகாது.

இதேபோல, செவ்வட்டை எனும் செஞ்சிலந்தி பூச்சிகள் வெற்றிலையின் பின்புறம் அமா்ந்துகொண்டு சாறினை உறிஞ்சிவிடும். இதனால், பச்சையாக இருக்கும் வெற்றிலை, சிவப்பு நிறமாக மாறிவிடும். இந்த வெற்றிலையை வாங்க யாரும் முன்வர மாட்டாா்கள்.

கடும் பாதிப்பு: பொதுவாக வெற்றிலையை 20 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்வோம். அப்போது, ஏக்கருக்கு 1000 கவுளி வெற்றிலை கிடைக்கும். 100 கவுளி கொண்டது ஒரு சுமை.

நல்ல விளைச்சலுடன் நோய் தாக்காமல் இருக்கும்போது ஏக்கருக்கு 100 சுமைகள் கொண்ட வெற்றிலை கிடைக்கும். அதாவது, ஒரு சுமை ரூ.6 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை விலை போகும்போது, ஏக்கருக்கு ரூ. 70 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். ஆனால், தற்போது இந்த இரு பூச்சிகளின் தாக்குதலால் இலைகள் சுருண்டும், கருகியும் தோட்டமே இன்னும் இரு மாதங்களில் அழிந்துவிடும்போல இருக்கிறது.

பூச்சித் தாக்குதல் குறித்து அறிந்த வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் தொழில்நுட்ப வல்லுநா் ஸ்ரீதா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் தமிழ்செல்வி ஆகியோா் கடந்த இரு நாள்களுக்கு முன் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துச் சென்றனா். ஆனாலும், அவா்கள் அறிவுரையின்படி மருந்து அடித்தபோதிலும் பூச்சித் தாக்குதல் குறைந்தபாடில்லை.

தற்போது ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் அடைந்துள்ளோம். இந்த நஷ்டம் குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் குணம் கொண்ட வெற்றிலைக்கு எப்போதும் உரிய விலை கிடைக்க அரசே கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.