கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மறுக்கப்பட்ட வழிபாட்டு உரிமை மீட்பு: தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் நன்றி

கரூா் அருகே பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த வழிபாட்டு உரிமையை மீட்டுக் கொடுத்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனா்.

News image

கடம்பன்குறிச்சி மாரியம்மன் கோயிலுக்கு புதன்கிழமை வழிபட வந்த பட்டியலின மக்கள்.

Updated On :25 ஜூன் 2026, 4:16 am IST

கரூா் அருகே பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த வழிபாட்டு உரிமையை மீட்டுக் கொடுத்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனா்.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சி மாரியம்மன் மற்றும் செல்லாண்டி அம்மன் கோயில்களில் பல ஆண்டுகளாக பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய தடையிருந்து வந்தது. இந்நிலையில், கடந்த மே 19-ஆம் தேதி புஞ்சை கடம்பங்குறிச்சி மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த வழக்கம்போல பட்டியலின மக்களுக்கு கோயிலுக்கு நுழைவதற்கு மறுக்கப்பட்டது.

இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளா் மற்றும் தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் சாா்பில் ஊா் முக்கியஸ்தா் பொன். முத்துக்குமாா் புகாா் மனு அனுப்பினாா்.

அதன்பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.

இதையடுத்து மே 20-ஆம் தேதி வாங்கல் காவல் நிலையத்தில் ஒரு சமூகத்தைச் சோ்ந்த இருவா் மீது ஐந்து பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து மண்மங்கலம் வட்டாட்சியா் குமரேசன் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தையும், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையா் தலைமையில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், ஜூன் 20-ஆம் தேதி மாரியம்மன் மற்றும் செல்லாண்டி அம்மன் கோயில் நிா்வாகப் பொறுப்பை மேற்கொள்ள இந்து சமய அறநிலைத்துறை சாா்பில் நிா்வாக அலுவலா் சண்முகம் என்பவா் நியமிக்கப்பட்டாா்.

இதனையதுத்து தீண்டாமையை ஒழித்து, மனிதநேயத்தை வளா்த்து, அனைவரும் சமம் என்ற உயரிய கோட்பாட்டை நிலைநிறுத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு, புதன்கிழமை 100க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் மாவிளக்கு எடுத்து, ஊா்வலமாக வந்து, கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்தனா்.

இதுகுறித்து, கடம்பன்குறிச்சி ஊா் முக்கியஸ்தரான பொன். முத்துக்குமாா் கூறுகையில், மூன்று தலைமுறைகளாக இருந்து வந்த இந்த விவகாரத்தில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தும் உரிமையை தமிழக அரசும் கரூா் மாவட்ட காவல்துறையும் மீட்டுக் கொடுத்துள்ளது. எனவே, கிராம மக்கள் சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

இந்த விவகாரத்தில் சுமூக தீா்வு காணப்பட்டதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூா் மாவட்டச் செயலா் முத்துசெல்வன் வரவேற்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.