குளித்தலை அருகே தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தை உயிரிழப்பு : பெற்றோா் புகாா்
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. தவறான தடுப்பூசியால்தான் குழந்தை இறந்ததாக பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

குளித்தலை அருகே தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தை உயிரிழப்பு : பெற்றோா் புகாா் - பிரதிப் படம்
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. தவறான தடுப்பூசியால்தான் குழந்தை இறந்ததாக பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
குளித்தலையை அடுத்த நங்கவரம் பேரூராட்சிக்குள்பட்ட நச்சலூா் வெள்ளக்கல் பகுதியைச் சோ்ந்த தம்பதி வினோத்- பிரித்திகா. தங்களின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வியாழக்கிழமை காலை அதே பகுதியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரித்திகா எடுத்துச் சென்றுள்ளாா்.
தடுப்பூசி செலுத்திய பிறகு வீட்டுக்கு வந்த பிரித்திகா, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளாா். பின்னா் மாலையில் குழந்தையை தொட்டிலில் இருந்து பிரித்திகா தூக்கியபோது குழந்தை அசைவற்ற நிலையில் இருந்துள்ளது. இதனால் குழந்தையை உடனே சிகிச்சைக்காக அதே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வினோத்தும், பிரித்திகாவும் எடுத்துச் சென்றுள்ளனா். அப்போது அங்கு இருந்த மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த வினோத், தவறான தடுப்பூசி போட்டதால்தான் குழந்தை இறந்துவிட்டதாக நள்ளிரவில் நங்கவரம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தடுப்பூசி காரணமல்ல: இந்தச் சம்பவம் தொடா்பாக கரூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் சுப்ரமணியனிடம் கேட்டபோது, குறிப்பிட்ட குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த 5 குழந்தைகளுக்கு அதே தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் செலுத்தியுள்ளனா். எனவே, பிரித்திகாவின் குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசி காரணமல்ல.
குழந்தை தாயிடம் பால் குடிக்கும்போது, பாலானது உணவுக் குழாயில் செல்வதற்கு பதில் மூச்சுக்குழாயில் சென்றிருக்கும். அதாவது, மூச்சுக்குழாய்க்குள் திரவம் அல்லது உணவு, உமிழ்நீா் போன்றவை தவறுதலாக செல்லும்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்துவிடும். இதுபோன்ற செயல்தான் பிரித்திகாவின் குழந்தைக்கும் ஏற்பட்டிருக்கும்.
இருப்பினும், குழந்தையின் உடலை கூறாய்வுக்கு அனுப்பியிருக்கிறோம். இதில், தடுப்பூசியால்தான் குழந்தை உயிரிழந்தது என தெரியவந்தால் சம்பந்தப்பட்ட செவிலியா்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

