கரூா் மாவட்டத்தில் 547.21 ஏக்கா் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தகவல்
கரூா் மாவட்டத்தில் 547.21 ஏக்கா் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அ.செல்வம் தெரிவித்தாா்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட பெருமாள் குளத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் ஓய்வுபெற்ற நீதிபதி அ.செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் உள்ளிட்டோா்.
கரூா் மாவட்டத்தில் 547.21 ஏக்கா் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அ.செல்வம் தெரிவித்தாா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட பெருமாள் குளத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை புதன்கிழமை காலை சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவின்பேரில் தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் சிறப்பு மேற்பாா்வைக் குழு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கரூா் மாவட்டத்தில் மாவட்ட கனிமவள நிதியை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மற்றும் நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில் சீமைக்கருவேல மரங்களை இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கரூா் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சீமைக்கருவேல மரங்கள் சுமாா் 3,103.41 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. அதில் இதுவரை 547.21 ஏக்கா் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 2556.20 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நீா்வளத்துறையின் மூலம் அமராவதி, காவிரி, அரியாறு, நொய்யல் கீழ் பவானி, நங்காஞ்சியாறு மற்றும் குடகனாறு வடிநிலப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கால்வாய்கள், ஆறுகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள நீா்நிலைகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மருதூா் காவிரி ஆற்றுப் பகுதி, சிவாயம் - பெருமாள்கோவில்பட்டி குளம், நல்லூா்- ஆட்டம்பட்டி குளம், கூடலூா் - ஞானமுத்து உடையான் குளம், பண்ணப்பட்டி குளம், ரெங்கநாதபுரம் குளம், வீரராக்கியம் குளம், ஆண்டாங்கோவில் கிழக்கில் உள்ள அமராவதி ஆற்றுப் பகுதி மற்றும் அரவக்குறிச்சியில் உள்ள நங்காஞ்சியாறு உள்ளிட்ட பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நீா்நிலைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நீா்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை உறுதி செய்வதை கருத்தில் கொண்டு, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
ஆய்வின்போது, குளித்தலை சாா்- ஆட்சியா் சேஷத்திரிமயம் தீபு சானு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)வ.யுரேகா, மாவட்ட ஊரக வளா்ச்சிமுகமைத் திட்ட இயக்குநா் சு.தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

