விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அதிகளவில் வங்கியாளர்கள் மூலம் கடனுதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:
அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு, வங்கியாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்துக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் விரைவாக சென்றடைய வங்கிகள் துரிதமாக செயல்பட வேண்டும். முதியோர் உதவித்தொகை, வங்கியின் வணிக சேவையாளர்கள் மூலம் குறித்த நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுய உதவி குழுக்களுக்கான கடன்களை தகுதி அடிப்படையில் அளித்து, பெண்களின் பொருளாதார மேம்பாடு உயர வழிவகை செய்யவேண்டும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன்களை அதிகளவில் அளிக்க வேண்டும். மேலும்,
பிரதம மந்திரி முத்ரா திட்ட கடன்கள், ஸ்டேண்ட் அப் இந்தியா மற்றும் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அதிக பயனாளிகள் பயனடைய வேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா.
தொடர்ந்து, அனைத்து வங்கிகளின் செயல்பாடுகள் குறித்தும், அரசாங்க துறைகள் மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ சார்ந்த கடன் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், முன்னோடி வங்கி மேலாளர் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) பா. அருள்தாசன், முதன்மை மேலாளர் (இந்தியன் ஓவர்சிஸ் வங்கி தஞ்சை மண்டலம்) ரமேஷ், மாவட்ட மேலாளர் (நபார்டு) நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.