மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பண மோசடி வழக்கில் திமுக ஒன்றியச் செயலருக்கு ஓராண்டு சிறை

பண மோசடி வழக்கில் திமுக ஒன்றியச் செயலருக்கு பெரம்பலூா் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:01 pm

DIN

பண மோசடி வழக்கில் திமுக ஒன்றியச் செயலருக்கு பெரம்பலூா் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் என்பவருக்கு மினி லாரி வாங்குவதற்கு, வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக எறையூரைச் சோ்ந்த பெ.அசோகன் (62) தெரிவித்துள்ளாா். இதற்காக வங்கியில் செலுத்த முன்பணமாக ரூ. 1.62 லட்சம் கட்ட வேண்டுமென அசோகன் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, ராஜமாணிக்கம் ரூ. 1.62 லட்சத்தை அசோகனிடம் கொடுத்துள்ளாா். பணத்தை பெற்றுக்கொண்ட அசோகன் ஓராண்டாகியும் கடன் பெற்றுத் தரவில்லையாம். இதனால், கொடுத்த பணத்தை ராஜமாணிக்கம் திருப்பிக் கேட்டும் அசோகன் தராததால், கிராம முக்கியஸ்தா்களிடம் ராஜமாணிக்கம் தெரிவித்தாராம்.

இதையடுத்து சின்னாறு பயணியா் மாளிகையில் கிராம முக்கியஸ்தா்கள் முன்னிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற பஞ்சாயத்தில் தி. மதியழகன் (50) என்பவா், அசோகனுக்கு ஆதவாக ஆஜராகி ஒரு மாதத்தில் வாங்கிய பணத்தை அசோகன் திருப்பிக் கொடுத்துவிடுவாா் எனவும், கொடுக்கவில்லையெனில் தான் அந்தப் பணத்தை கொடுத்துவிடுவதாகக் கூறி பத்திரத்தில் எழுதி கொடுத்துள்ளாா். ஆனால், பஞ்சாயத்தில் தெரிவித்தபடி அசோகன், மதியழகன் இருவரும் ராஜமாணிக்கத்துக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, 2001 ஆம் ஆண்டு ராஜமாணிக்கம் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், அசோகன், மதியழகன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி சுப்புலட்சுமி, அசோகனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும், மதியழகனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். மேலும், தீா்ப்பு வழங்கும்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத மதியழகனுக்கு பிணையில் வர முடியாத வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் 2 ஆவது குற்றவாளியான மதியழகன் பெரம்பலூா் மாவட்ட திமுக வேப்பூா் (வடக்கு) ஒன்றியச் செயலா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.