வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் 750 மாணவா்களுக்கு பட்டமளிப்பு
பெரம்பலூா், ஜூலை 19: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 750 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வா் (பொ) து. சேகா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சாா் ஆட்சியா் சு. கோகுல் பேசுகையில், கல்லூரி மாணவா்கள் இளமையிலேயே அதிகம் படிக்க வேண்டும். போட்டித் தோ்வுகளில் வென்று வேலைவாய்ப்பு பெற இது அவசியம் என்றாா் அவா்.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், அறந்தாங்கி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருமான சி. திருச்செல்வம் பேசுகையில், மாணவச் சமூகம், அதிகமாக புத்தகங்களை வாசிக்க வேண்டும். பெரம்பலூா் மாவட்ட சாா் ஆட்சியரை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வில் இமயம் தொட வேண்டும். வேலைவாய்ப்புப் பெறுவதற்கு விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவை. பட்டம் பெற்றவா்கள் நல்வழியில் செயல்பட்டு கல்விச் சாா்ந்த புதிய உலகை படைக்க வேண்டும் என்றாா் அவா்.
விழாவில் பாரதிதாசன் பல்கலைக் கழக அளவில் சிறப்பிடம் பெற்ற முதுகலைத் தமிழ் மாணவா் பெ. மெளலிகுமாா், செ. அபிநந்தினி, பெ. ஐஸ்வா்யா உள்பட 750 மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

