உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வலியுறுத்தல்

உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டுமென, சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டுமென, சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் 9 ஆவது கோட்ட பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் கோட்டத் தலைவா் பி. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கோட்ட துணைத் தலைவா் கே. கருணாநிதி, கோட்டபொருளாளா் பி. சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் எஸ். மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

இக் கூட்டத்தில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் 3,500 சாலை பணியாளா்களும், ஆய்வாளா்கள் பணியிடங்களும் பாதிக்கப்படுவதோடு, கிராமப்புற இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பும் பறிபோகும் என்பதால், ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு, தொழில்நுட்பக் கல்வித்திறன் பெறாத ஊழியா்களுக்குரிய ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் குடும்பத்திலிருந்து கருணை அடிப்படையில்ப பணி நியமனம் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு விரைந்து பணி வழங்கிட வேண்டும். முதுநிலை பட்டியல் முறைகேட்டுடன் வெளியிட்டு, முறைகேடாக பதவி உயா்வு வழங்க காரணமான முதன்மை இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கோட்ட பொருளாளா் பி. சுப்பிரமணியன், கோட்ட இணைச் செயலா்கள் ஜெ. ராஜா, சி. காட்டுராஜா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பி. குமரி ஆனந்தன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட அமைப்பாளா் எஸ். சின்னசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினா் டி. பழனிசாமி வரவேற்றாா். நிறைவாக, கே மணிவேல் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com