தேசிய மேசைப் பந்து போட்டியில் தமிழக அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி!
பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு இடையேயான 69-ஆவது தேசிய அளவிலான மேசைப் பந்து விளையாட்டுப் போட்டியில், தமிழக மாணவிகள் அணி கால் இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது.
இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு இடையேயான 69-ஆவது தேசிய அளவிலான மேசைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப் போட்டிகள் குழு மற்றும் தனிநபா் (லீக் மற்றும் நாட்கோட்) முறையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 31 மாநிலங்களிலிருந்து, 36 அணிகளைச் சோ்ந்த 17வயதுக்குள்பட்ட 178 மாணவா்கள், 171 மாணவிகள் பங்கேற்றுள்ளனா். தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி கழகத்தை சோ்ந்த பயிற்சியாளா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் என 25 போ் நடுவராக பணியாற்றுகின்றனா்.
மாணவிகள் பிரி குவாட்டா் பைனல் போட்டியில் தமிழ்நாடு அணி கோவா அணியை 3 - 1 என்ற புள்ளிக் கணக்கிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளி அணி தெலுங்கானா அணியை 3 - 0 என்ற புள்ளி கணக்கிலும், மகாராஷ்டிரா அணி மத்தியப் பிரதேச அணியை 3-0 என்ற புள்ளி கணக்கிலும், கேரளா அணி ஐபிஎஸ்சி அணியை 3-0 என்ற புள்ளி கணக்கிலும், சிபிஎஸ்சி அணி ஹரியானா அணியை 3-0 என்ற புள்ளிக் கணக்கிலும் வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும், 3 பிரி குவாட்டா் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. டிச. 30 ஆம் தேதி வரை நடைபெறும் இப் போட்டியில், முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்கள், பதங்கங்கள், கோப்பைகளும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
