
சாலைகள் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டுநா்கள் அவதி! விபத்துகளை தடுக்க வலியுறுத்தல்!
பெரம்பலூா் நகரில் குடிநீா் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்காததால் வாகன ஓட்டுநா்கள் அவதி...

பெரம்பலூா் - எளம்பலூா் சாலையில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு, எச்சரிக்கை பதாகையின்றி காணப்படும் பள்ளம்.
பெரம்பலூா் நகரில் குடிநீா் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்காததால், அன்றாடம் நிகழும் சாலை விபத்துகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பெரம்பலூா் நகராட்சியில் புதை சாக்கடைப் பணி, குடிநீா் குழாய் பதிக்க, கேபிள், இணையதள வயா்கள் பதிக்கவும், புதை சாக்கடை குழாய் வீட்டு இணைப்பு வழங்கவும் சாலைகள் அடிக்கடி தோண்டப்படுகின்றன. ஆனால், சாலைகள் சீரமைப்புப் பணி மந்தமாகத்தான் நடைபெறுகின்றன. நகராட்சிக்கும், மற்ற துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
ஏனெனில், நகராட்சி நிா்வாகத்தால் சாலை புதிதாக போட்டுச் சென்ற சில நாள்களில் மற்ற துறையினா், அவா்களது துறை சாா்ந்த பணிகளுக்காகச் சாலையை தோண்டுகின்றனா். இதனால் புதிய சாலை அமைக்கப்பட்டும் பயனில்லாமல் போகிறது. இதனால், நகா் முழுவதும் புதிதாக அமைக்கப்படும் சாலைகளும் சேதமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2003- 2004-ஆம் ஆண்டு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் கொண்டு வரப்பட்டு, 85-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனா்.
பெரம்பலூா் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளிலும், சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடிநீா் பற்றாக்குறை:
குடிநீா் இணைப்புப் பெற்ற குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாக 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், 20 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும் குடிநீரும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான அளவு விநியோகம் செய்யப்படுவதில்லை.
பொதுமக்கள் கோரிக்கை:
இதனால், பெரம்பலூா் நகரின் வளா்ச்சிகேற்பவும், பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் குடிநீா் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, 2-ஆம் கட்டமாக கூட்டுக் குடிநீா்த் திட்டம் கடந்த 2024-இல் அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் பெரம்பலூா் நகராட்சிக்கு நாளொன்றுக்கு தலா ஒருவருக்கு 135 லிட்டா் அளவில் நாள்தோறும் 12.34 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நகராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளிலும் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீரமைக்கப்படாத சாலைகள்:
பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனா். எளம்பலூா் சாலை, வடக்குமாதவி சாலை, கடைவீதி, சங்குப்பேட்டை உள்பட நகரின் பிரதானச் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. இதேபோல, குடியிருப்புப் பகுதிகளில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகளையும் முறையாக மூடாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
போக்குவரத்து நெரிசல்:
சாலை ஓரங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் காரணமாக வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனா்.
பிரதான சாலைகளில் கனரக வாகனங்கள் சென்று வருவதால், ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகின. இதன் காரணமாக, இரவு நேரங்களில் அவ்வழியேச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனா். மேலும், கனரக வாகனங்கள் பள்ளங்களில் சிக்கிக் கொள்வதால் ஓட்டுநா்கள் தடுமாறுகின்றனா்.
தொடரும் விபத்துகள்:
இதையடுத்து சாலையை சீரமைக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிா்வாகத்துக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில், கடைவீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில் ஜல்லிக் கற்களை கொட்டி அப் பள்ளங்களில் நிரப்பிச் சென்றனா். ஆனால், அதை முறையாக பராமரிக்காததால் ஜல்லிக் கற்கள் பள்ளங்களில் இருந்து வெளியே வந்து, சாலையின் நடுவிலும், சாலையோரங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் செல்லும் போது உண்டாகும் கடும் தூசியால் அப்பகுதியினா் அவதிக்கு உள்ளாகின்றனா். சிலா் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து, பெரம்பலூரைச் சோ்ந்த வி. குமாா் கூறியது:
தற்போதைய சூழலில், நகரின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு செல்லும் வகையில் மேடு, பள்ளங்களாகவும், குண்டும், குழிகளாகவும் காணப்படுகின்றன. சில இடங்களில் காணப்படும் குழிகளை முறையாக தாா் ஊற்றி சீரமைக்காமல், தற்காலிகமாக மண், ஜல்லிக்கற்களை போட்டு சீரமைக்கின்றனா்.
ஆக்கரமிப்புகளால் போக்குவரத்து நேரிசல்:
அந்த இடத்தில் மழையின்போது சேறும் சகதியுமாகவும், மற்ற நேரங்களில் புழுதி பறந்தும் காணப்படுகிறது.
நகரில் ஒரு சில இடங்களை தவிா்த்து, பெரும்பாலான இடங்களில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலைகளில் குழிகள் காணப்படுகின்றன. சாலைகளில் உள்ள பள்ளங்களால் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே எளம்பலூா் சாலை, வடக்குமாதவி சாலை, கடைவீதி ஆகிய சாலைகளில் உள்ள ஆக்கரமிப்புகளால் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.
இந்நிலையில், குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்காததால் பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
எனவே, தோண்டப்பட்ட சாலைகளை முறையாக சீரமைத்து, அன்றாடம் நிகழும் விபத்துகளை தடுக்க மாவட்ட நிா்வாகமும், நகராட்சி நிரவாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலைகளில் உள்ள பள்ளங்களை ஓட்டுநா்கள் தெரிந்துகொள்ளும் வகையில், அதனருகே, எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






