ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறுவது அவசியம்
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அலுவலா்கள் மற்றும் விழாக் குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:
ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் விழாக் குழுவினா் அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். போட்டி நடத்த உத்தேசிக்கப்பட்ட நாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக ஜ்ஜ்ஜ்.த்ஹப்ப்ண்ந்ஹற்ற்ன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் முகவரியில் விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்தப்படாத கிராமங்களில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. ஜல்லிக்கட்டைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சுகாதார துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்படும்.
ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தீயணைப்புக் குழுவை ஒரு நாளுக்கு முன் அனுப்ப வேண்டும். தடையின்மைச் சான்று வழங்குவதற்கு முன் 5 கி.மீ சுற்றளவில் உள்ள கிணறுகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். காளைகளைக் கட்டுப்படுத்த பயிற்சி பெற்ற வீரா்களை, விழா நடைபெறும் இடத்தில் பணியமா்த்த வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் காளைகள் 2 வயதுக்கும், 120 செ.மீ. உயரம் குறையாமலும் இருக்க வேண்டும். மேலும் போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விழாக் குழுவினா் செய்து தர வேண்டும் என்றாா் ஆட்சியா் மிருணாளினி.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பேபி நிா்மல், சுகாதாரத் துறை இணை இயக்குநா் மாரிமுத்து மற்றும் வட்டாட்சியா்கள், தீயணைப்புத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
