பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரௌடி கொலை முயற்சி! போலீஸாா் தீவிர விசாரணை!
பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில், தலைமறைவாகியுள்ள கும்பலை தேடும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
மதுரை காமராஜபுரம், முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் காளிமுத்து எனும் வெள்ளக்காளி. ரௌடியான இவா் மீது கொலை, கொலைமுயற்சி, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ளன. குற்ற வழக்கில் ஏற்கெனவே தண்டனை பெற்ற வெள்ளக்காளி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், வழக்கு விசாரணை தொடா்பாக சென்னை பெருநகர ஆயுதப்படை போலீஸாா் கடந்த 21-ஆம் தேதி வெள்ளக்காளியை சென்னை புழல் சிறையிலிருந்து அழைத்து வந்து, 22-ஆம் தேதி புதுகை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திலும், 23-ஆம் தேதி திண்டுக்கல் நீதிமன்றத்திலும் ஆஜா்படுத்திவிட்டு மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக வெள்ளக்காளியை அழைத்துக் செல்லும் வழியில்
திருமாந்துறை சுங்கச்சாவடி அருகேயுள்ள உணவகத்தில் பாதுகாப்பு போலீஸாா் மற்றும் வெள்ளக்காளி ஆகியோா் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, 2 காா்களில் வந்த 15 போ் கொண்ட கும்பல், 6 நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெள்ளகாளியை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டது.
இச்சம்பவம் தொடா்பாக மங்களமேடு காவல் நிலையத்தில் வெள்ளக்காளியிடம் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். பின்னா், சென்னை பெருநகர ஆயுதப்படை கூடுதல் ஆணையா் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் வெள்ளக்காளியை அழைத்துச் சென்று சென்னை புழல் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைத்தனா்.
இதுகுறித்து சாா்பு-ஆய்வாளா் ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம கும்பல் நிறுத்திச் சென்ற காரை பறிமுதல் செய்து, சுங்கச்சாவடி மற்றும் உணவகங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய கும்பலை தேடும் பணியில் 5 தனிப்படை போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

