
பெரம்பலூரில் மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கே.என். அருண் நேரு எம்பி. உடன், தொல். திருமாவளவன் எம்பி, மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக், சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் உள்ளிட்டோா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கண்காணிப்புக் குழுத் தலைவரும், பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே.என். அருண் நேரு தலைமை வகித்தாா். இணைத் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மத்திய அரசின் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், தேசிய ஊரக குடிநீா் வழங்கும் திட்டம், மக்களவை உறுப்பினா் உள்ளூா் வளா்ச்சித் திட்டம், மத்திய நிதிக் குழு மானியம், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், இத்திட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள், பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு பேசியது:
மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு சீரான குடிநீா், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளை நிவா்த்தி செய்ய வேண்டும். திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏதேனும் இடா்பாடுகள், தேவைகள் அனுமதி இருந்தால், கவனத்துக்கு கொண்டுவரும்பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு தீா்வு காண முடியும். பொதுமக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தேவைப்படுகின்றன என்பதை தெரிவிக்கும்பட்சத்தில், அதை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ஒதுக்கப்படும் பணிகளை முடித்து பொதுமக்கள் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் முறையாக கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா், பெரம்பலூா் தொகுதி எம்எல்ஏ கி. சிவகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






