சித்ரா பௌர்ணமியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் மக்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாப்பிள்ளையார் குளம் 2-ம் வீதியில் உள்ள நாகம்மாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், சாந்தநாதர் சுவாமி கோயிலில் இருந்து பால்குடம், காவடி, பறவைக்காவடி எடுத்து, அலகு குத்தியும் மேளதாளங்கள் முழுங்க ஊர்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள குழந்தை முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் பக்தர்கள், அலகுகுத்தி, பறவைக் காவடி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி செட்டியார் தெரு பாலதண்டாயுதபாணி கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில், வடகாடு வடக்கு கடைவீதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம், அலகு குத்தி காவடி, பறவை காவடி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
பொன்னமராவதியில் : பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் சித்ராபௌர்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடக்கமாக சிறப்பு யாகபூஜை, தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை கோவை முன்னாள் இணை ஆணையர் முத்துபழனியப்பன், தமிழாசிரியர் சிஎஸ். முருகேசன் ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொன்னமராவதி பணிமனை ஊழியர்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்தனர்.
மேலும், பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.