புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் துணை வட்டாட்சியா் நிலையிலான பணிகளுக்கு நிரந்தரப் பணி நியமனப் பட்டியலை வெளியிட வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இரவு, பகல் பாராது மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே வருவாய்த் துறை அலுவலா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். இதற்கிடையே தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் நிரந்தரப் பணி நியமன ஆணையை வெளியிடக் கூடாது என ஒரு போராட்டத்தையும் நடத்தினா்.